Monday, 10 March 2014

உங்களுக்கு முடியாது சிவகார்த்திகேயனுக்கு பண்ணலாம்: தனுசுக்கு புரிந்த நிஜம்!

தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. கிட்டதட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


இந்த படத்திற்காக அண்மையில் சில கோடிகள் பைனான்ஸ் தேவைப்பட்டதாம் தனுசுக்கு. விநியோகஸ்தர்களிடம் கேட்டுபார்க்கலாம் என்ற நம்பிக்கையில் போன் போட்டவருக்கு பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூட  பரவாயில்லை.


அவர்கள் சொன்ன பதிலால் தனுஷ் நிலை குலைந்தாராம். சார் நீங்க தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற டாணா படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம்.


ஆனால் நீங்க நடிக்கிற வேலையில்லா பட்டதாரிக்கு எங்களால் பணம் தர முடியாது என்றார்களாம்.


தமிழ்சினிமாவில் தன்னோட இடம் எங்கே போய்கொண்டிருக்கிறது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டாராம் தனுஷ்.  


 இருந்தாலும் தன் நண்பன் நல்ல இடத்திற்கு உயர்ந்துள்ளாரே என்று சந்தோஷப்பட்டதோடு இல்லாமல் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஆடப் போகிறாராம்.

கோச்சடையான் விழாவுக்கு கமல்ஹாசன் ஏன் வரவில்லை?

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.


விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்ய ரஜினிகாந்த் பேட்டியளித்தார். ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கமல் ஹாசன் விழாவிற்கு வரவில்லை.


இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், மும்பையிலேர்ந்து நட்சத்திரங்களை இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவழைச்சிருந்தீங்க.


ஆனால் உங்கள் அப்பாவின் நண்பரான கமல் சார் வரலையே? என்ற கேள்விக்கு கமல் சார் வரணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அவர் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை என்றார்.


தொடர்ந்து, கோச்சடையான் விளம்பரங்களில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலி பெயர் வந்திருக்கே? இந்த கேள்விக்கு சௌந்தர்யாவின் பதில் இதோ, படத்தில் ஒரே ஒரு பாடல்தான் வாலி சார் எழுதியிருக்கார். மற்ற எல்லா பாடல்களும் வைரமுத்து சார்தான் எழுதியிருக்கார். அதனால்தான் அவர் பெயரை பின்னால் போட வேண்டியதாகிவிட்டது என்று கூறினார்.


உடனே அவரிடம் வாலி சீனியராச்சே? என கேள்வி எழ திரும்பவும் அதே பதிலை ரிப்பீட் செய்தார். மேலும் இதில் வாலியை சிறுமைப்படுத்தும் எண்ணம் சிறிதும் எங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.  

சிவகுமாருக்கு சவாலாக அமைந்த `காரைக்கால் அம்மையார்' படம்!


சிவகுமாரின் திறமைக்கு சவாலாக அமைந்த படம் "காரைக்கால் அம்மையார்.''

இதில் அவர் சிவனாகவும், ஸ்ரீவித்யா பார்வதியாகவும் நடித்தனர்.

காரைக்கால் அம்மையாராக வேடம் ஏற்றவர், கே.பி.சுந்தராம்பாள்,

`தகதகதக தகதக என ஆடவா...
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா...?

என்று உணர்ச்சியோடும், வேகத்தோடும் பாட, சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் துரிதகதியில் வேகமாகச் சுழன்று சுழன்று ஆடவேண்டும்.

64 வயதான கே.பி.சுந்தராம்பாள் 6 நிமிடப் பாடலை தமது வெண்கலக் குரலில் ஒரே மூச்சில் பாடி முடித்தார்.

ஸ்ரீவித்யா குழந்தைப் பருவத்தில் இருந்தே நடனத்தை முறையாக கற்றவர். பார்வதியாக நடனம் ஆட அவர் தயார் நிலையில் இருந்தார். ஆனால் சிவகுமாரால் அவருக்கு ஈடு கொடுத்து ஆடமுடியுமா?

கே.பி.சுந்தராம்பாளுக்கே இந்த சந்தேகம் ஏற்பட்டது.

"ஏ.பி.என்! இந்தப் பையன் டான்சரா? நன்றாக ஆடுவானா? பாட்டு ரொம்ப வேகமாக இருக்கிறதே. புதுப்பையனை நம்பி இருக்கிறாயே!'' என்று ஏ.பி.நாகராஜனிடம் கூறினார், கே.பி.சுந்தராம்பாள்.

"கவலைப்படாதீங்க! அவங்க ஆடும்போது, நீங்களும் நடிக்கத்தானே போறீங்க அப்ப பாருங்க!'' என்று தன்னம்பிக்கையோடு ஏ.பி.என். பதிலளித்தார்.

பிறகு சிவகுமாரை அழைத்தார். "நடனத்துக்கே அரசனான நடராஜன் வேடத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஐந்து வயதில் இருந்து 15 வருடமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாவை நீங்க பீட் பண்ணணும். ஒரு வாரம் டைம் தருகிறேன். நல்லா ஒத்திகை பாருங்க'' என்று கூறினார்.

நடனமேதை "பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், நடனத்தை அமைத்துக்கொடுக்க, அவரது உதவியாளர் விமலா, சிவகுமாருக்கு பயிற்சி அளித்தார்.

ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி பெற்றார், சிவகுமார்.

ஆறு நிமிடப் பாடல் காட்சியை 7 நாட்கள் படமாக்கினார்கள். தினமும் 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது.

சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் போட்டி போட்டு ஆடினார்கள். சிவகுமார் தலையில் அணிந்துள்ள ஜடாமுடிக்குள் இருந்து, வியர்வை அருவிபோல் கொட்டும். கைகளில் இறுக்கிக் கட்டப்பட்ட நகைகள் ரத்த ஓட்டத்தை தடை செய்யும். காலில் சலங்கைகள் மோதி மோதி ரத்தம் வடியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆடினார்.

சிவகுமாரின் சிவதாண்டவத்தை பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் அசந்து போனார்கள். குறிப்பாக கே.பி.சுந்தராம்பாள், "நீ எப்படி ஆடுவாயோ என்று பயந்து போயிருந்தேன். என் வயிற்றில் பால் வார்த்து விட்டாய்!'' என்று வாழ்த்தினார்.

சிவகுமார் நடித்த "திருமலைத் தெய்வம்'' என்ற படம் 1973-ல் வெளிவந்தது.

இதில் சிவகுமார் திருமாலாகவும், ஸ்ரீவித்யா மகாலட்சுமியாகவும், ஏவி.எம்.ராஜன் நாரதராகவும் நடித்தனர்.

சிவகுமார் கடைசியாக நடித்த புராணப்படம் "கிருஷ்ணலீலா.'' 1977-ல் இப்படம் வெளிவந்தது.

இதில் சிவகுமாரும், ஜெயலலிதாவும் நடித்தனர். ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்திருந்தார்.

இந்தப்படம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

"புராணப்படங்களில் கடைசியாக நான் பங்கு கொண்ட படம், `கிருஷ்ணலீலா.' படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் படம் முடிக்கப்படவில்லை. தயாரிப்பாளர்கள் மாறினார்கள். அதனால் படம் வெளிவர நீண்ட காலம் ஆயிற்று. கால இடைவெளியில் ரசனையும் மாறிவிட்டது.

ஏபி.என்., இறப்பதற்கு முன் எவ்வித குறையும் வைக்காமல் படத்தை முடித்துக் கொடுத்திருந்தார். பத்திரிகையாளர் காட்சிக்கு நான் ஏற்பாடு செய்து, படம் பற்றி முறையான விமர்சனம் வெளிவர வழி செய்தேன்.

என்ன செய்தும், சென்னையிலும், வெளியூர்களிலும் மூன்றாவது வாரம் ஓடவே படம் திணறியது. புராணப் படங்களின் சீசன் முடிந்து, அடுத்த சீசன் தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.

இதன் பிறகும் புராணப் படங்களில் நடிக்க எனக்கு அழைப்புகள் வந்தன. அவை அனைத்தையும் நிராகரித்து விட்டேன். இனி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தேன். "கிருஷ்ணலீலா'' வியாபார ரீதியில் அடைந்த தோல்விதான், நான் இந்த முடிவை எடுத்ததற்கு காரணம்.''

இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்

விஜய் சேதுபதியை வைத்து ‘‘இடம் பொருள் ஏவல்’’ படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார்.


 இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து சீனுராமசாமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–


இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் கிராமத்து பெண் சாயல் வரவில்லை.


 கடும் முயற்சி எடுத்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. பட்டணத்து பெண் போலவே தெரிந்தார். எனவேதான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


விஷ்ணு ஜோடியாக இன்னொரு கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுள்ளோம். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை.


இவ்வாறு சீனுராமசாமி கூறினார். 

"நான் ஏன் வந்தேன்", விளக்குகிறார் ஷாருக்கான்

தமிழில் எனக்குத் தெரிந்த வார்த்தை 'தலைவா' மட்டும்தான். அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன், என்றார் ஷாரூக்கான்.


 கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், "25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.


ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்.


பிற்பகல் 3 மணி. எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். ஆனால் இவர் மட்டும் தன் பிராக்டிஸை விடாமலிருந்தார்.


வெற்றிபெற கடின உழைப்பு தேவை என்பதை இந்த மனிதரைப் பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன். நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் படங்களை அந்த அளவுக்கு ரசித்துப் பார்த்திருக்கிறேன். என்னுடைய ‘ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார்.


தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த வார்த்தை தலைவா. அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இன்று நான் சென்னை வந்திருக்கிறேன். தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன.


இந்த விழாவுக்கு வந்துள்ள திரையுலக ஜாம்பவான்களுடன் நானும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இங்கு வந்தால் எனது சொந்த வீட்டுக்கு வந்த மாதிரிதான் இருக்கிறது," என்றார்.

"இது ரஜினி வாய்ஸ் இல்லை", சொல்கிறார் சௌந்தர்யா

நேற்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் ரஜினியின் சில நிமிட ருத்ர தாண்டவக் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.


 கோச்சடையான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கார்ட்டூன் மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.


இது டீசர்தான்... அதுவும் ரஜினி வாய்ஸ் கூட கிடையாது. மெயின் ட்ரைலர் கலக்கலாக வரும் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தெரிவித்திருந்தார். தான் சொன்னபடியே ட்ரைலரில் அசத்தியிருந்தார் சவுந்தர்யா.


கோச்சடையான், ராணா என இரண்டு பாத்திரங்களையுமே வித்தியாசப்படுத்திக் காட்டியிருந்த சவுந்தர்யா, இளம் ரஜினியை வியப்பூட்டும் வகையில் வடிவமைத்திருந்தார். சண்டைக் காட்சிகளும், ரஜினியின் குரலும் அந்த ட்ரைலரின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன.


அடுத்து ரஜினியின் ருத்ரதாண்டவக் காட்சியை மட்டும் தனியாக போட்டுக் காட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறையினரும் பிரமித்துப் போனார்கள். அனிமேஷனில் இத்தனை கச்சிதமாக ருத்ரதாண்டவ காட்சிகளை வடிவமைத்த சவுந்தர்யாவைப் பாராட்டினார்கள்.


 பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, 'இதுதான் அனிமேஷன் சாதனை. இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இதுபோன்ற பர்பெக்ட்னஸ் வர வேண்டும் என்பதுதான்.


நீங்கள் ட்ரைலர்தான் பார்த்திருக்கிறீர்கள். மெயின் பிக்சர் பார்த்தால் இன்னும் பிரமிப்பீர்கள்," என்றார்.

ஆர்யாவின் அடுத்த படங்கள் ஒரு பார்வை!

கோலிவுட்டின் சாக்லேட் பாயாக இருந்துவரும் ஆர்யா சமீபமாக ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதல் இளவரசன் என்ற பட்டத்தை உலக நாயகனிடமிருந்து பெற்றார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் ஆரம்பம், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்தன.


அந்த வெற்றிகளைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக இயற்கை படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் புறம்போக்கு திரைப்படத்திலும், ”தடையறத் தாக்க” மகிழ்திருமேனி இயக்கத்தில் ”மீகாமன்” படத்திலும் நடித்துவரும் ஆர்யா, விரைவில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.


மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் ஆர்யா - விஜய் இருவருக்குமே மிகப் பெரும் வரவேற்புக் கிடைத்தது. மதராசப்பட்டினம் திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகலாம்.


இத்துடன் ஆர்யாவின் பேவரிட் இயக்குனரான விஷ்ணுவர்த்தன் இயக்கவுள்ள திரைப்படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஆர்யா. மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த அனைத்துப் படங்களும் இந்த ஆண்டே வெளியானால் ஆர்யாவின் நடிப்பில் இவ்வாண்டு வெளியான படங்களில் மொத்தம் ஐந்து திரைப்படங்கள் கணக்காகும்.

விஷால் படத்தில் அஞ்சான் சூர்யா!

சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள்.


படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு படமாகிறதாம். கூடவே சூர்யா-சமந்தா இணையும் பெரும்பாலான காட்சிகளையும் படமாக்குகிறாராம் லிங்குசாமி. ஆக அந்த ஷொட்டியூலோடு பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.


அதனால், அஞ்சானை ஆகஸ்ட் 15ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். முன்னதாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15-ந்தேதி அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்களாம்.


 இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தோடு யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது.


அதனால், யுடிவி தயாரிப்பில் உருவாகி வரும் விஷாலின் நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வருவதால், அப்படத்தோடு அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசனை வெளியிடுகிறார்களாம்.

மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா!

சிம்புவும், த்ரிஷாவும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்கள்.


பெரிய பட்ஜெட்டில் எடுத்த இரண்டாம் உலகம் பெரிய தோல்வியை அடைந்ததால் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் செல்வராகவன்.


இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.


செல்வராகவன் இயக்கத்தில், த்ரிஷா ஏற்கெனவே தெலுங்கில் ஆடவாரி மாட்லாகு அர்த்தலே வேறுலே என்ற படத்தில் நடித்திருக்கிறார்.


 இந்த படம்தான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் ஆனது. த்ரிஷா கேரக்டரில் நயன்தாரா நடித்தார்.


அதற்கு பிறகு இப்போது மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க இருக்கிறார். செல்வராகவன் இப்போது இசை அமைப்பாளர் யுவனுடன் இணைந்து படத்துக்கான பாடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஐதராபாத் சிறையில் விஜய்!

விஜய்யின் கேரியரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி மிக முக்கியமான படம். ஒரு ராணுவ வீரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இடத்தில், வெடிகுண்டு வைத்து நாட்டை சீர்குலைக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் கதாபாத்திரம். அது விஜய்க்கு அற்புதமாகவும் பொருந்தியிருந்ததோடு, படமும் மெகா ஹிட்டாக அமைந்தது.


அதையடுத்து, விஜய் இயக்கத்தில் தலைவா, நேசன் இயக்கத்தில் ஜில்லா என இரண்டு படங்களில் நடித்த விஜய்க்கு எதிர்பார்த்த ஹிட் கிடைக்கவில்லை. அதனால் இப்போது தீரன் படம் மூலம் மீண்டும் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்திருப்பதால் அதிக உற்சாகத்தோடு இருக்கிறார். துப்பாக்கியை மிஞ்சும் ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.


அதனால், இதற்கு முன்பு அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்தபோது பெரிய வித்தியாசத்தைக்காட்டாத விஜய், இந்த படத்தில் நடிக்கும் இரண்டு வேடங்களிலும நிறைய வித்தியாசம் காட்டுகிறாராம். அதனால் உடல்ரீதியாகவும் சேஞ்ச் காட்டுவதால் இரண்டு கெட்டப்புக்கும் இடையே காலஅவகாசமும் எடுத்துக்கொள்கிறாராம்.


மேலும், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ள முருகதாஸ், வில்லன் அட்டாக்கினால் சிறைக்குள் விஜய் தள்ளப்படும் காட்சிகளை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகிறார். இதை மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கிக்கொண்டிருக்கிறார். இதில் சிறைச்சாலைக்குள் ஊடுருவும் வில்லனின் அடியாட்களிடம் விஜய் மோதும் ஒரு அதிரடி சண்டை காட்சியும் படமாகிறதாம்.

பாலாவின் பரதேசி கெட்டப்பில் ஆதிவாசி படம்!

வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். பெரியாரிச கொள்கை அடிப்படையில் உருவான அப்படம் கோலிவுட்டின் பெரும்பாலான படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது. முதலில் படம் வெளியானபோது சரியானபடி படம் மக்களை சென்றடையவில்லை.


 பின்னர் அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். அதையடுத்து, ஒன் என்ற பெயரில் ஒரு படத்தை தொடங்கினார் சங்ககிரி ராஜ்குமார். படத்தில் ஒரேயொருவர் மட்டும் நடிக்கும் கதை. அந்த ஒருவரும் அவரே. அதோடு படத்திலுள்ள மொத்த பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டதால் அந்த படத்தை அவரால் இன்னமும் முடிக்கமுடியவில்லை.


இந்த நிலையில. இப்போது நெடும்பாறைகள் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். சேலம் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தில் காட்டுவாசிகளின் வாழ்க்கையை முறையை பதிவு செய்துள்ளாராம் ராஜ்குமார். காடே கதியென்று வாழும் மனிதர்கள் நகரத்துக்கு வந்தபோது படும் அவஸ்தைகளையும் சொல்லியிருக்கிறாராம். பெரும்பாலான காட்சிகள் காட்டுப்பகுதியிலேயே நடத்தப்பட்டதால் 6 லட்சம் செலவில் காட்டுக்குள் செட் அமைத்தும் படமாக்கினாராம்.


மேலும், இப்படத்தில் நடித்த அனைவருக்கும் காட்டுவாசிகள் அணிவது போன்ற ஆடைகளையே பயன்படுத்தியிருக்கும் ராஜ்குமார், அவர்களை பரதேசி படத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பாலா மொட்டையடித்து விட்டது போன்ற கெட்டப்பில் நடிக்க வைத்துள்ளாராம். தற்போது இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர், விரைவில் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.