Thursday, 30 January 2014

ரஜினி ரகசிய பயணம் சென்றுள்ளார்!

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த‌ தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர‌து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன‌து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

படித்த பள்ளியை வலம் வந்தார்

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த‌ பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.

வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.

இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.

இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய‌வில்லை.

அதிகாலையிலேயே ரசிகர்கள்!

வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.

மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி

ஒரு கட்டத்தில் ரசிகர்க‌ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப‌தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர். 

போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு..!




ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர்.

அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்

ஹீரோவாக மாறிய டெக்னீஷியன்கள் ..!



டெக்னீஷியன்களே ஹீரோக்களாக நடிக்கும் படம் கள்ளப்படம். இதுபற்றி இயக்குனர் ஜெ.வடிவேல் கூறியதாவது: 

புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் தற்போது நலிவடைந்து வருகிறது.

முன்பெல்லாம் ஊர் திருவிழா என்றால் கூத்து நடக்கும். இப்போது பாட்டுக்கச்சேரி, குத்தாட்ட நிகழ்ச்சி தான் நடக்கிறது. பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம்தரும் வகையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது டாக்குமென்ட்ரி படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சத்துடன் த்ரில்லராக கதை கரு அமைந்துள்ளது.

சினிமாவில் முன்னேற புதியவர்கள் எப்படி போராட வேண்டி இருக்கிறது என்ற பின்னணியில் இக்கதை அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான நான், ஒளிப்பதிவாளரான ஸ்ரீராம் சந்தோஷ், இசை அமைப்பாளரான கே, எடிட்டராக பணியாற்றும் காகின் ஆகிய நான்குபேரும் அந்தந்த கதாபாத்திரங்களாக படத்தில் வேடமேற்றிருக்கிறோம்.

ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கிறார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து நிஜகூத்து கலைஞர்களை வரவழைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சுட்டகதை பட ஹீரோ யின் லக்ஷ்மி ப்ரியா, நரேன், சிங்கம் புலி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடம் ஏற்றிருக்கின்றனர்.

‘அஞ்சான்’ ஆகஸ்ட் 15-ந்தில் வருகிறான்!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. அடுத்தகட்டமாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்த்திரை காணாத பல இடங்களிலும் படமாக்க உள்ளனர். தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் முழு படத்தின் படப்பிடிப்பை நடத்தத் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா குத்துப்பாடல் ஒன்றுக்கு சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார். இப்படத்திற்காக ரெட் டிராகன் என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக ரெட் டிராகன் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘கோலி சோடா’ - 2–ம் பாகம் தயார்!

‘கோலி சோடா’ சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

கோலி சோடா படத்தில் நடித்த நடிகர் குழுவினர் நேற்று இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

நடிகர்கள் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோருடன் நடிகைகள் சாந்தினி, சீதா மற்றும் பட டைரக்டர் விஜய்மில்டன், சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஆகியோரும் ரசிகர்களை சந்தித்தனர்.

நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.

டைரக்டர் விஜய்மில்டன் பேசும் போது, ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்–க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக அபிராமி தியேட்டருக்கு வந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தியேட்டர் மேலாளர் பாலு தலைமையில் இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.மகாதேவன் மற்றும் திரையரங்க ஊழியர்கள் வரவேற்றனர்.

இதேபோல் ஸ்ரீனிவாசா தியேட்டர் சிவக்குமார், விஜயன், மற்றும் ஆனூர் தியேட்டர் ராமசாமி ஆகியோரும் வரவேற்றனர். 

பார்வதி ஓமனக்குட்டன்! இந்தி பீட்சா நாயகி!

உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரும் எதிர்பார்ப்போடு பில்லா-2வில் நடித்தார். பில்லா-2 பிளாப் ஆகவே பார்வதியின் கனவு கலைந்தது. இப்போது பேஷன் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என்று உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஹிட்டடித்த பீட்சாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எதையும் தேடிப்போவதில்லை. கிடைக்கிற வாய்ப்புகளை முழு மனநிறைவோடு செய்கிறேன். இப்போது உலகம் முழுவதும் பேஷன் ஷோக்களுக்கு போய் வருகிறேன். ரசிகர்களை நேரடியாக சந்தோஷப்படுத்தி பார்க்கிற அனுபவம் அது. உலக நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வாய்ப்புகள் அமையாதது வருத்தம்தான். ஆனாலும் பில்லா-2 எனக்கு ரொம்ப பிடித்த படம். ஸ்ரீகாந்த் நடிக்கும் நம்பியார் படத்தில் நானும் ஆர்யாவும் இணைந்து கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறோம். அடுத்து பீட்சா இந்தி ரீமேக்கில் நடிக்கிறேன். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன் என்கிறார் பார்வதி.

இது நம்ம ஆளு - சிம்பு - நயன்தாராவின் புதிய படம்!

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி படத்தின் டைரக்டர் பாண்டிராஜ் கூறியிருப்பதாவது: இந்தப் படத்திற்கு முதலில் கதவை திற காதல் வரட்டும், லவ்வுன்னா லவ்வு அப்படியொரு லவ்வு இந்த இரண்டு தலைப்பில் ஒன்றைத்தான் வைக்க முடிவு பண்ணியிருந்தேன். ஆனால் படத்துல நயன்தாரா நடிக்கிறதுன்னு முடிவானதும் இதைவிட பெட்டரா ஒரு தலைப்பு வைக்கணும்னு தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதான் அதுக்கான ஐடியா கிளிக் ஆச்சுது. சிம்பு ஒவ்வொருமுறையும் நயன்தராவை பார்க்குறப்போ "இது நம்ம ஆளு சார்"னு ஃபீல் பண்ணுற மாதிரி படத்துல நிறைய காட்சிகள் இருக்கு. அதையே படத்துக்கு டைட்டிலா வச்சிட்டா என்ன என்று யோசித்தேன். அதுதான் டைட்டில் இது நம்ம ஆளு.

சிம்புவுக்கு ஒரு லவ் பெயிலியராயிடும். கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. அவருக்கு நயன்தாராவை நிச்சயம் பண்ணிடுறாங்க. கல்யாணத்துக்கு 6 மாசம் இருக்கிற நிலையில இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிஞ்சுக்கிட்டு லவ் பண்றாங்க கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன பிரச்னைகள் வருதுங்கறதுதான் படத்தோட கதை.

சிம்புவும் சரி, நயன்தாராவும் சரி எந்த பிளாஷ்பேக்குக்கும் போகாமல் அவுங்கவுங்க கேரக்டரை அழகா நடிச்சிடுறாங்க. சூட்டிங் ஸ்பாட்டுல நல்ல பிரண்ட்லியா பழகிக்கிறாங்க. சில காட்சிகள் அவுங்களோட பழைய நினைவுகளை கிளர்ற மாதிரி இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே சின்சியராக நடிச்சுடுறாங்க. சில காட்சிகள்ல எப்படி நடிக்கிறதுன்னு கேட்பாங்க. அதான் நிறைய பண்ணியிருக்கீங்களே அதையே பண்ணிடுங்கன்னு சொல்வேன். சிரிச்சிக்கிட்ட நடிச்சு கொடுத்துடுவாங்க என்கிறார் பாண்டிராஜ்.

ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு! டி.டே இந்திப் படம் தமிழில் வெளியாகாது..?

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கு ஸ்ருதி ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியில் நான் நடித்த டி.டே படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன். இதற்கு என் அனுமதியை பெறவில்லை. என்னிடம் தகவலும் சொல்லவில்லை. இது ஒப்பந்தததை மீறுவதாகும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை இப்போது செய்து வருகிறேன். அதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் கமலஹாசன் மகள், குடும்பபாங்கான நடிகை என்ற நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கிறது. இந்தப் படம் வந்தால் அந்த இமேஜ் மாறும் என்பதால் படம் தமிழில் வெளிவருவதை ஸ்ருதி விரும்பவில்லை என்கிறார்கள்.