Friday, 28 February 2014

'முக்தா' படங்களில் ரஜினி, கமல்!

ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த படங்கள் உள்பட மொத்தம் 65 படங்களை 'முக்தா' சீனிவாசன் இயக்கியுள்ளார்.

1973-ம் ஆண்டு வித்யா மூவிஸ் சூரியகாந்தி என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்தார். இதில் முத்துராமன், ஜெயலலிதா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றிப்படமானது.

'சூரியகாந்தி' பற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'எந்த திரைப்பட டைரக்டருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சினிமாவே பிடிக்காத பெரியார் ஈ.வெ.ரா, 'சூரியகாந்தி' வெற்றி விழாவிற்கு வந்து கேடயம் வழங்க வேண்டும் என்று விரும்பினேன். கி.வீரமணிதான் பெரியாரிடம் என்னை அழைத்துச் சென்றார். பெரியாரிடம் விஷயத்தைக் கூறினேன்.

'படத்தின் கதை என்ன?' என்று பெரியார் கேட்டார். நான் சொன்னேன். பெரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். விழா நடக்கும் தேதியை கேட்டு
குறித்துக்கொண்டார். விழாவுக்கு வருவதாக கூறினார்.

ஆனால் என் நண்பர்கள், 'பெரியார் வரமாட்டார்' என்று கூறினார்கள்.

ஆனால் பெரியார், விழாவுக்கு சரியான நேரத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் அனைவரையும் வாழ்த்திப்பேசி, கேடயங்களை வழங்கினார்.

அந்தப் படத்தில் நடித்ததற்காக தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கேடயத்தை கொடுக்கும்போது, 'இனி இந்த மாதிரி படங்களிலேயே நடியுங்கள்' என்று பெரியார் கூறினார்.

இன்றைக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான் நடித்த சிறந்த படங்களுள் 'சூரியகாந்தி'யையும் ஒன்றாக கருதுகிறார். எனது டைரக்ஷனில், 'பொம்மலாட்டம்', 'அன்பைத்தேடி', 'சினிமா பைத்தியம்' ஆகிய படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.'

இவ்வாறு 'முக்தா' கூறினார்.

முக்தா சீனிவாசன் டைரக்ஷனில், 'சினிமா பைத்தியம்', 'சிம்லா ஸ்பெஷல்' ஆகிய படங்களில் கமலஹாசனும், 'பொல்லாதவன்', 'சிவப்பு சூரியன்' ஆகிய படங்களில் ரஜினியும் நடித்து உள்ளனர்.

கமல் நடித்த 'நாயகன்' படத்தை 'முக்தா'சீனிவாசன் தயாரித்தார்.

இதுபற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'கமலை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். ஒருமுறை கமல் நடித்த 'சினிமா பைத்தியம்' படத்தை பெருந்தலைவர் காமராஜருக்கு போட்டுக் காட்டினேன். அந்த நிகழ்ச்சிக்கு கமலையும் வரச்சொல்லி இருந்தேன்.

படத்தைப் பார்த்துவிட்டு காமராஜர் வெளியே வந்தபோது, கமல் உள்ளே நுழைந்தார். அப்போது கமலை பார்த்த காமராஜர், 'நீ பரமக்குடி சீனிவாசன் மகன்தானே, உன் தாயார் நலமாக இருக்கிறார்களா?' என்று கேட்டார்.

அதன் பிறகு என்னிடம் திரும்பி 'நான் பரமக்குடி செல்லும்போது இவர்கள் வீட்டில்தான் சாப்பிடுவேன்' என்று கூறினார். பின்னர் கமலை தட்டிக்கொடுத்து விட்டு சென்றார்.

ரஜினி கால்ஷீட் கொடுத்த தேதியில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். காட்சி அமைப்புகளை மாற்றும்படி கருத்து எதுவும் சொல்லாமல், மிக மிக ஒத்துழைப்போடு நடித்தார். அந்த நட்புணர்வை நானும், அவரும் இன்றும் போன்றி வருகிறோம்.'

இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறினார்.

'கோடை மழை', 'கதாநாயகன்', 'சின்ன சின்ன ஆசைகள்', 'வாய்க்கொழுப்பு', 'கண்களின் வார்த்தைகள்' உள்பட 65 படங்களை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்து உள்ளார். நிறைய படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார்.

பல டெலிவிஷன் சீரியல்களையும் டைரக்ட் செய்து உள்ளார்.

சினிமா வாழ்க்கை பற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'சினிமா வாழ்வில் எனக்கு ரோல் மாடல் டைரக்டர் கே.ராம்நாத்தான். அவரிடம் இருந்து நான் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டை கற்றுக்கொண்டேன். இன்று வரை நான் எந்தத் தவறும் செய்யாமல் சினிமாத் துறையில் வாழ்க்கையை ஓட்டிவிட்டேன்.

பட உலகில் நடிகை மனோரமா, 'சோ', ஜெமினிகணேசன், நாகேஷ், லட்சுமி, ஸ்ரீபிரியா, ராதாரவி போன்றோர் என் நெருங்கிய நண்பர்கள். கடந்த 4 ஆண்டுகளாக நான் படத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. மீண்டும் வருகிற ஆண்டில் திரைப்படத் தொழிலில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன்' என்றார், முக்தா சீனிவாசன்.

இயக்குனர் ஆன பிறகு தான் திருமணம் என்ற முடிவில் இருந்த முக்தா சீனிவாசன் 'முதலாளி' படம் வெளியானதும் தன் அண்ணியின் தங்கையான பிரேமாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம், திருப்பதியில் நடந்தது.

திருமணத்தின்போது 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்த பிரேமா, பின்னர் பொருளாதாரத்திலும், இந்தியிலும் 'எம்.ஏ' படித்து பட்டம் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு ரவி, முக்தா சுந்தர் என்று 2 மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர். முக்தா சுந்தர் சினிமா துறையில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் சினிமா 'டெக்னிக்' படித்தவர்.

முக்தா சீனிவாசன் புத்தகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். 'இணையற்ற சாதனையாளர்கள்' உள்பட 45 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1947-ம் ஆண்டில் சினிமாத் துறையில் சேர்ந்த 'முக்தா' சீனிவாசன், தற்பொழுது சினிமா துறையில் 59 ஆண்டுகள் முடிந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது, திரைப்படத்துறையில் 'முக்தா'வுக்கு இது வைர விழா ஆண்டு. 

கண்டிப்பாக உங்கள் கைபேசிக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள்!

கண்டிப்பாக உங்கள் கைபேசிக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள்

உங்கள் சிம் அட்டை மற்றும் கைபேசியை கடவுச்சொல்லை வைத்து பூட்டவும்.

உங்கள் கைபேசியில் உள்ள தானாக பூட்டிக்கொள்ளும் வசதியை செயல் படுத்தவும்.

உங்கள் கை பேசியில் உள்ள தகவல்களை குறியாக்கம் (encrypt) செய்யவும்

நம்பகமான ஒரு மென்பொருள் வழங்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு மென்பொருளை கைபேசியில் உபயோகிக்கவும்.

நம்பகமான வலைத்தளங்களின் மொபைல் பயன்பாடுகளை மட்டுமே தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணைய தளங்கள் மற்றும் மென்பொருள் வழங்கு நிறுவனங்கள் அணுக அல்லது பெற முயலும் பொழுது போது கவனமாக இருங்கள்

கோரப்படாத அல்லது எதிர்பாராத இணைப்புகளை கிளிக் வேண்டாம்

உங்கள் கைபேசி பில்லில் அசாதாரண தரவு கட்டணம் அல்லது பிரீமியம் அழைப்புகள் கட்டணம் ஆகியவற்றை சரிபார்க்கவும்

உங்கள் கை பேசியின் இயக்க முறைமைகளின் புதுப்பிப்புகளை (opeating system updates) அவ்வப்போது தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

Wi-fi மற்றும் ப்ளூடூத் வசதிகளை தேவையான பொழுது மட்டுமே புத்திசாலிதனமாக பயன்படுத்தவும்.

உங்கள் கைபேசியை மறுசுழற்சி (recycle) செய்ய முடிவு செய்தால், முதலில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை துடைத்து (wipe out) விடவும்.

உங்கள் சேவை வழங்குனரின் மொபைல் கண்காணிப்பு வசதியை பெறவும். இதன் மூலம் உங்கள் கைபேசி காணாமல் போகும் பொழுது அதன் செயல்பாடுகளை முடக்கி கைபேசியை செயலிழக்க செய்ய முடியும். .

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்!!!!!...

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்!!!!!...

நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.

அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

கிருமிகளின் பட்டியல்

லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.

அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சுத்தம் உங்கள் கையில்

தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம்.

இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாகத் தொற்றிவிடும்.

நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதுதான், நமக்குக் கைவந்த கலையாயிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப்யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உணவுத் துணுக்கை ஆதாரமாகக் கொண்டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகிவிடும்.

சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்பு, சுத்தத்தைத் துரத்தி விடுகிறது.

சில அலுவலகங்களில் இடம் மாறியோ, வேலை நேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்த நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையில் சுத்தம் செய்வது எவ்வளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத்தெடுக்கலாம்.

இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத்தம். எங்கெல்லாம் கிருமித் தொற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல் லாம் சென்றுவந்த பிறகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண்ணீரிலோ அல்லது சுத்திகரிப்பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக்கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும்.

அதேபோலச் சாப்பாடோ, கொறிப்போ எதையும் தூசி பறக்கும், மனிதர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலோ சாப்பிடுவதைத் தவிருங்கள். இப்படிச் சுத்தத்தைப் பராமரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்.

படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது 

துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன

தமிழில் ஆஸ்திரேலிய நடிகை!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மெலிசா. இவர் மகா மகா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் மதிவாணன் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார்.


இளையராஜா அண்ணன் வரதராஜனின் மகன் பாவலர் சிவா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் பாடல்களை கேட்ட இளையராஜா, சிவாவுக்கு பாராட்டு தெரிவித்தார். வேலை விஷயமாக ஆஸ்திரேலியா செல்லும் இளைஞன், அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறான். திடீரென அவள் காணாமல் போகிறாள்.


அதிர்ச்சி அடையும் காதலன் தனது தோழியுடன் சேர்ந்து காதலியை ஆஸ்திரேலியா முழுவதும் தேடுகிறான். த்ரில்லர் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் முழுவதும் ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் கடற்கரை பகுதிகளில் நடந்துள்ளது.


பிரேம் ஒளிப்பதிவு. இதில் நிழல்கள் ரவி, அனுபமா குமார் மற்றும் ஆஸ்திரேலிய நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர். 

துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் யார்? தங்கை பரபரப்பு பதில்!

துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் அவரது பல பாய் பிரண்ட்களில் ஒருவர் என்றார் காஜலின் தங்கை நிஷா. சமீப காலமாக ஹீரோயின்கள் தங்கள் காதலர்களுடன் டேட்டிங் என்ற பெயரில் வெளிநாடுகளில் சுற்றி திரிவதுடன், நண்பர்களின் பார்ட்டிகளிலும் கலந்து கொள்கின்றனர்.


 துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் இவரது தங்கை நிஷாவுக்கு அவரது காதலன் கரண் வலேச்சா என்பவருடன் திருமணம் நடந்தது. அக்காவுக்கு திருமணம் (காஜல்) செய்யாமல் தங்கைக்கு திருமணம் செய்வது ஏன் என்ற போது, நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் எனது திருமணத்தை தள்ளி போட்டிருக்கிறேன் என்று காஜல் பதில் அளித்தார். நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற போது, யாரையும் காதலிக்கவில்லை என்றார்.


இந்நிலையில் காஜல் அகர்வால் தனது பாய் பிரண்டுடன் துபாயில் சுற்றித் திரிந்த காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காஜல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவரது தங்கை நிஷா கூறும்போது, ‘காஜலுக்கு நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது.


அவர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட பல்வேறு படங்களை அவரே தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதுபோல்தான் இந்த படமும். இதை ஊதி பெருக்க பார்க்கிறார்கள். இதுபற்றி யாரும் பெரிய அளவில் கற்பனையை வளர்த்து கொள்ள வேண்டாம். யாரையாவது காதலித்தால் அதை காஜல் தானாகவே முன்வந்து வெளியில் சொல்வார் என்றார். - 

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

பல நடிகைகளும் நடிக்க மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தை தைரியமாக ஏற்று நடித்துள்ளார் டிவி நடிகை சான்ட்ரா எமி.

மனைவி உள்பட பல சன் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பிரஜின். இவர் மனைவிதான் சான்ட்ரா. இவரும் பல சீரியல்களில் நடித்துள்ளார். சுற்றுலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சிவப்பு எனக்குப் பிடிக்கும் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகளையும் கேட்டுப் பார்த்துள்ளார் இயக்குநர் யுரேகா.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் பாத்திரத்தின் தன்மையைக் கேட்டபிறகு யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வேடத்தில் நடித்தால் நிச்சயம் தன்னைப் பற்றி அதேபோன்ற இமேஜ்தான் இருக்கும் எனும் அளவுக்கு அந்த கேரக்டர் இருந்ததாம்.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் சான்ட்ரா அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். அந்த பாத்திரத்தில் நடிப்பதில் உறுதியாக இருந்தாராம். பல காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளாராம்.

ஒரு நடிகை என்ற சாயலே இல்லாத மாதிரி நடித்து அசத்தியுள்ளாராம் சான்ட்ரா.

அவரு பார்த்தால்தான் எனக்கு திருப்தி!


ரன்தீப் ஹுடாவுக்கு நஸ்ருதீன் ஷா மீது அளப்பரிய மரியாதை. அவரின் பாராட்டு தேசிய விருதைவிட முக்கியமானது. நஸ்ருதீன் ஷாவுக்கும் ஹுடா மீது தனிப் பாசம். இந்த முகவுரைக்கு காரணம் உள்ளது.

ரன்தீப் ஹுடாவின் ஹைவே படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஹுடா கலக்கிட்டார் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தை ரன்தீபின் காட்ஃபாதர் இன்னும் பார்க்கவில்லை.


யார் என்ன சொல்லுங்க... நஸ்ருதீன் ஷா பார்த்தாதான் ஹைவே முழுமையடையும் என்று ஹுடா கறாராக சொல்லிவிட்டார். இதற்கிடையில் படம் பார்த்த பலரும் ஷாவுக்கு போனை போட்டு உங்க சிஷ்யன் நல்லா பண்ணியிருக்கான் என்று பாராட்டியிருக்கிறார்கள். ஆக, குருவும் சந்தோஷம்.


இந்த கண்ணாமூச்சி இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது. படத்தைப் பார்த்து சிஷ்யா சூப்பர் என்று பாராட்ட ஷாவுக்கு என்ன தடை? அதுதான் புரிய மாட்டேங்குது.

மணிரத்னம் படத்தின் ஒளிப்பதிவாளர்!


கடைசியில் மணிரத்னம் படம் குறித்த உறுதியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மணிரத்னத்தின் புதிய படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் ரவி வர்மன்.


ரவி வர்மன் அந்நியன், தசாவதாரம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்தியில் வெளியான பர்பி படத்துக்கும் இவர்தான் கேமராமேன். மணிரத்னம் படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல்முறை.


மணிரத்னம் படத்துக்குப் படம் மாற்றுகிற ஒருவர் ஒளிப்பதிவாளர். தொடர்ந்து ஒரே ஒளிப்பதிவாளரை அவர் பயன்படுத்துவதில்லை. ஆனால் ராஜீவ் மேனன், சந்தோஷ் சிவன் என்று சொற்பமான பேரையே பயன்படுத்தவும் செய்வார். எப்போதாவது பி.சி.ஸ்ரீராம்.


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ரவி.கே.சந்திரனுடன் பணிபுரிந்தார். அவருடன் மணிரத்னம் வேலை பார்ப்பது அதுவே முதல்முறை. 12 வருடங்களுக்குப் பிறகு அவர் வேலை செய்யப் போகும் புதிய கேமராமேன் ரவி வர்மன்.


மகேஷ்பாபு, நாகார்ஜுன், ஃபகத் ஃபாசில், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

நான் சிகப்பு மனிதன் - விஷாலின் இன்னொரு அதிரடி !

ஏப்ரல் பதினொன்று சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவோம். கோச்சடையானைப் பார்த்தெல்லாம் கவலையில்லை என்று விஷாலும், இயக்குனர் திருவும் உறுதியாக இருக்கிறார்கள் தங்கள் முடிவில். சூப்பர்ஸ்டாருக்கே அஞ்சாதவர்கள் பேய்க்காக பயப்படுவார்கள்?


பொதுவாக 13 ஆம் தேதியில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஏன் ஹோட்டலில்கூட 13 ஆம் எண் அறையில் தங்க மாட்டார்கள். அது பேய்க்குரிய எண். அதை முடிந்தவரை தவிர்க்கவே அனைவரும் விரும்புவர்.


சிகப்பு மனிதர்கள் விஷாலுக்கும், திருவுக்கும் 13 மற்றுமொரு எண். இந்த மாதம் 13 ஆம் தேதியில் நான் சிகப்பு மனிதனின் பாடல்கள் வெளியீட்டை வைத்துள்ளனர். சத்யம் சினிமாஸில் வெளியீட்டு விழா நடக்கிறது.


விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், யுடிவியும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. பண்டிகை தினங்களிலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளிலும் மட்டுமே பெரிய படங்களை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பதில் தமிழ்ப் புத்தாண்டான 14 ஆம் தேதி நான் சிகப்பு மனிதன் வெளியாகும் என தெரிகிறது.

பறக்கும் கல்லறை மனிதன் - திரைவிமர்சனம்!

நடிகர் : ஆருன் ஏகார்ட்
நடிகை : யுவானி ஸ்ட்ராகோவ்ஸ்கி
இயக்குனர் : ஸ்டூவார்ட் பீட்டி
இசை : ஜானி கிளிமெக்
ஓளிப்பதிவு : ரோஸ் எமிரி

படத்தின் கதை 1795-ல் இருந்து தொடங்குகிறது. விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.

இவனை உருவாக்கியதன் மூலம் பிற்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறார் விக்டர். இதனால் கல்லறை மனிதனை அழிக்க பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசுகிறார். ஆனால் கல்லறை மனிதன் அழியாமல், தன்னை அழிக்க நினைத்த விக்டரை பழி வாங்க திட்டம் தீட்டுகிறான். அதன் விளைவாக விக்டரின் மனைவியை கொன்று விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பனி பிரதேசத்திற்கு போய்விடுகிறான்.

இதை அறிந்த விக்டர், கல்லறை மனிதனை தேடி பனி பிரதேசத்திற்கு செல்கிறார். அங்கு பனியின் தாக்கத்தால் விக்டர் இறந்து விடுகிறார். தன்னை படைத்தவன் என்ற காரணத்தினால் கல்லறை மனிதன், விக்டரை அடக்கம் செய்கிறான். அப்போது அங்கு வரும் அரக்கர்கள், கல்லறை மனிதனை தாக்குகிறார்கள். அதில் ஒரு அரக்கனை இவன் கொன்று விடுகிறான். இதைப் பார்க்கும் அரக்கர்களின் எதிரியான கார்கோலிஸ் இனத்தை சேர்ந்தவர்கள் கல்லறை மனிதனையும், இவனை உருவாக்கிய குறிப்பு அடங்கிய டைரியையும் காப்பாற்றி, வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

மனிதனும் அல்லாத, அரக்கனும் அல்லாத, கார்கோலிஸும் அல்லாத கல்லறை மனிதனை கொன்றுவிடுமாறு தன் ராணியிடம் படைத்தளபதி கூறுகிறான். இதற்கு ராணி மறுப்பு தெரிவிக்கிறாள். மேலும் அவனிடம் ஏதோ மனித நேயம் இருக்கிறது. அதனால் இவனை நம்மிடமே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறாள்.

இந்நிலையில் கல்லறை மனிதனையும் விக்டரின் டைரியையும் தேடி அரக்கர்கள் அலைகிறார்கள். இறுதியில் கல்லறை மனிதனை அவர்கள் கண்டுபிடித்தார்களா? டைரியை கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை.

கல்லறை மனிதனாக நடித்திருக்கும் ஆருண் ஏகார்ட், கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிக்ஸ் பேக் உடற்கட்டோடு சண்டை காட்சியில் மிரள வைக்கிறார். நாயகி யுவானி ஸ்ட்ராகோவ்ஸ்கி சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். ஜானி கிளிமெக்கின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ரோஸ் எமிரியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. இயக்குனர் ஸ்டூவார்ட் பீட்டி திரைக்கதையில் விறுவிறுப்பை அதிகப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பறக்கும் கல்லறை மனிதன்’ அழிவில்லா மனிதன். 

வெற்றிமாறன் ஐ.பி.எஸ். - திரைவிமர்சனம்!

நடிகர் : மோகன் லால்
நடிகை : ஆஷா சரத்
இயக்குனர் : மேஜர் ரவி
இசை : ஸ்ரீ குமார்
ஓளிப்பதிவு : பிரதீப் நாயர்

மும்பையில் மிகப்பெரிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன்லால். இவர், அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் அதிரடி போலீஸ்காரராக வலம் வருகிறார். இந்நிலையில், மர்ம கும்பலால் பள்ளிச் சிறுமி கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய கும்பல் யார் என்பதை விசாரிக்கும் மோகன்லால், அந்த கும்பல் இது போல் பள்ளிச் சிறுமிகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையை செய்து வருவது தெரிகிறது. அதன்படி, கடத்திய சிறுமிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்புவதும் தெரிகிறது. உடனே, மோகன்லால் அந்த கும்பலை தேடி கேரளாவுக்கு வருகிறார்.

மும்பையில் கடத்தியது போன்றே கேரளாவிலும் சிறுமி ஒருவள் கடத்தப்படுகிறாள். இந்த கடத்தல் வேலைகளை செய்வது யார் என்பதை துப்பறியும் மோகன்லால் இறுதியில் அந்த கும்பலை பிடித்தாரா? சிறுமிகளை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

ஐ.பி.எஸ். அதிகாரியாக மோகன்லால் மிடுக்கான தோற்றத்துடன் வலம் வருகிறார். ஆனால், படத்தில் இவர் ஒரு காட்சியில் கூட போலீஸ் உடை அணிந்திருப்பதை பார்க்க முடியவில்லை. யாரையும் பாரபட்சம் இன்றி அடித்து துவைப்பது, யாருக்கும் மரியாதை கொடுக்காதது என துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடத்தப்பட்ட தனது மகளை காப்பாற்ற துடிக்கும்போது பாசத்தில் நம்மையும் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மோகன்லாலுக்கு இணையாக பேசப்படுவர் வில்லன் முரளி சர்மா தான். இவருடைய ஆண்மை இழப்புக்கு மோகன்லால் காரணம் என்பதால் அவரது மகளை பழிவாங்க துடிப்பதும், சோனாவுடம் நெருக்கமாக இருக்கும் காட்சியில் தன்னால் அந்த சுகத்தை அனுபவிக்க முடியவில்லையே என எண்ணி அழுவதுமாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இறுதிக்காட்சியில் சிரித்து, சிரித்து மோகன்லாலை அழவைப்பதில் சிகரம் தொடுகிறார்.

மற்றபடி, படத்தில் வரும் மலையாள நடிகர் முகேஷ், சோனா உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை, அவர்கள் பாதுகாப்பில் காட்டுவதில்லை என்பதை வலியுறுத்தி படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் மேஜர் ரவிக்கு சலாம் போடலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளை நீளமாக வைத்து விறுவிறுப்பை குறைத்திருக்கிறார். நிறைய இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஒரு பாடலைத் தவிர வேறு பாடல்கள் இல்லை. ஆரம்ப பாடலும் கேட்கும்படியாக இல்லை. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஸ்ரீகுமார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிட்டாலும், பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.,’ வேகம் இல்லை. 

காவியத் தலைவன்: கிட்டப்பா, சுந்தராம்பாள் கதை அல்ல: வசந்தபாலன்

அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத் தலைவன், சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா ஷெட்டி நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரிலையன்ஸ் மீடியாவும், ஒய்நாட் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை ஓசைப்படாமல் எடுத்து வருகிறார் வசந்தபாலன். இந்தப் படம் பழம்பெரும் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளின் கதை என்று கூறப்பட்டது.


இதுகுறித்து வசந்தபாலன் எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தார். இப்போது முதன் முறையாக படம் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அங்காடி தெரு படப்பிடிப்பின் போது எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் நாடக கலைஞர்களின் வாழ்க்கை பற்றி நிறைய பேசினார். மேக்-அப், நாட்டியம், நாடகம், நடிப்பு, கைதட்டல் என அவர்கள் ஒரு வித்தியாசமான உலகத்தில் வாழ்ந்திருந்கிறார்கள்.


அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்ய முடிவு செய்திருந்தேன். அதுதான் காவியத் தலைவன். அரவான் படத்திற்கு முன்பே இந்த படத்தை இயக்க இருந்தேன். இது பெரிய பட்ஜெட் படம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் ஒதுக்கி வைத்திருந்தேன். கிடைத்த உடன் ஆரம்பித்து விட்டேன்.


இது மேடை நாடக கலைஞர்களை பற்றிய கதை. தனிப்பட்ட யாருடைய கதையையும் சொல்லவில்லை. கிட்டப்பாவின் நேரடி வாரிசுகள் இதுபற்றி என்னிடம் கேட்டார்கள். இது அவர்களின் காதல் கதை இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டேன். மொத்த ஆயுளையும் நாடகத்துக்காக அர்ப்பணித்த ஏழைக் கலைஞர்களின் கதை. அதற்குள்ளும் காதல், ஏக்கம், வறுமை, நம்பிக்கை நிறைந்திருக்கிறது.


கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் நாடக வாழ்க்கையும், காதலும் சின்ன இன்ஸ்பிரேசன்னு சொல்லிக்கலாம். சித்தார்த்திடம் கொஞ்சம் கிட்டப்பாவின் சாயல் இருக்கும் அதனால் அவரை தேர்வு செய்தேன். முக்கிய கேரக்டரில் பிருத்விராஜை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டார். இசைக்கு முக்கியத்தும் மிக்க படம் என்பதால் ரகுமானும் இசை அமைக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு வசந்தபாலன் கூறியுள்ளார்.

கோச்சடையானில் நாகேஷூம் நடித்துள்ளார் - செளந்தர்யா பேட்டி!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி இயக்குநராக அவதரித்தார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனையடுத்து ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா, ஒருபடி மேலே போய், தன் அப்பாவையே தன் முதல்படத்தில் ஹீரோவாக்கி களம் இறக்குகிறார். அந்தப்படம் தான் கோச்சடையான். 3டி அனிமேஷன் படமாக, இந்திய சினிமாக்களில் முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் செளந்தர்யா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் கார்பன் மொபைல் போனில், கோச்சடையான் மொபைல் என்று வெளியிட்டுள்ளனர். இதற்கான விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் செளந்தர்யா,

கோச்சடையான் டெக்னாலஜி படம்

கோச்சடையான் சாதாரண படம் கிடையாது. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள டெக்னாலஜி படம். பொதுவாக மக்கள், சினிமாக்காரர்கள் ஒருபடத்தை ஐந்தாறு மாதங்களில் எடுத்து அடுத்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் பண்ணி விடுகிறார்கள் என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அது அக்ஷ்ன் போன்ற கமர்ஷியல் படங்களுக்கு செட்டாகும். இதுபோன்ற அனிமேஷன் படங்களுக்கு ஒத்துவராது. கோச்சடையான் படம் இவ்வளவு காலம் தாமதமாகி செல்ல, அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் தான் காரணம். அவதார் போன்ற படங்களை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. கோச்சடையான் ஆக்ஷ்ன் படம் கிடையாது, டெக்னாலாஜி நிறைந்த படம். படத்தின் கதை கூட டெக்னாலஜி நிறைந்த கதை தான். இதில் பணியாற்றி இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள்.

அப்பாவை இயக்கியது சந்தோஷம்

அப்பாவை வைத்து படம் இயக்கியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு அப்பாவாக அவர் இருக்கும் போது மிகவும் பொறுப்புணர்ச்சியுடன், பாதுகாப்புடன் இருப்பார். அதேசமயம் நடிகராக தொழில்பக்தியுடன் இருப்பார். திறமைசாலிகளை எப்பவும் அப்பா ஊக்குவிப்பார், அதேப்போல் ஒருமகளாக, இயக்குநராக எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்.ஒரு மகளாக நான் இந்தப்படத்தை இயக்கும்போது தீபிகாவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க அப்பா ரொம்ப சங்கடப்பட்டார். இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அப்பா மட்டுமல்ல இப்படத்தில் நடித்துள்ள சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கோச்சடையானில் நாகேஷூம் இருக்கிறார்

கோச்சடையான் படத்தை பற்றி இதுவரை வெளிவராத ஒரு தகவலை சொல்லப்போகிறேன். இந்தப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷூம் நடித்துள்ளார். உண்மையில் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை. மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது முகம் மற்றும் உடலை வைத்து அவரும் நடித்தது போன்று எடுத்துள்ளோம். திரையில் ரசிகர்கள் பார்க்கும்போது நாகேஷ், நிஜத்தில் நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கோச்சடையான் படத்தின் ஆடியோ சி.டி.யின் கவர்பேஜிலேயே நாகேஷின் உருவத்தை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் அவருக்கு இப்படத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம்.

கோச்சடையான் படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரலில் படம் ரிலீஸாகும். கோச்சடையான் படத்திற்கு ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து வருங்காலத்தில் இதுபோன்ற படங்களை நான் நிறைய எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

அரைசதம் அடித்த தல, தளபதி!

தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டர். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள். "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க... என்னை கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க..."ன்னு இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 50வது நாளுக்கு வந்துவிட்டது வீரம்.


சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, சாந்தி, அபிராமி, மாயாஜால் ஆகிய மால் தியேட்டர்களில் தல இன்னும் வேட்டிய மடிச்சுக்கட்டியபடி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் வீரம் வெற்றி நடைபோடுவதாக விநியோகஸ்தர்கள் ஏரியா தகவல்கள் தெரிவிக்கிறது.


இளைய தளபதி விஜய்யும், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்த ஜில்லாவை ஆர்.டி.நேசன் டைரக்ட் செய்திருந்தார். காஜல் அகர்வால் ஹீரோயின். பொங்கலையொட்டி வெளியான ஜில்லா 50வது நாளுக்கு வந்துவிட்டது. சத்யம், ஸ்கேப், தேவி, அபிராமி, சங்கம், ஆல்பட், பெரம்பூர் எஸ் 2, பிவிஆர், உதயம், கமலா, வளாகங்களில் ஜில்லா கொடி இன்னும் பறக்கிறது. தமிழ்நாட்டில் 60 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

100 வது நாளை தொடுவது யார்? தலையா, தளபதியா? 'வீ ஆர் வெயிட்டிங்'.

'அமரா' - திரைவிமர்சனம்!

நடிகர் : அமரன்
நடிகை : சோனு
இயக்குனர் : ஜீவன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : ராஜா முகமது

கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார் நாயகன் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச் செல்ல முடிவெடுத்து மதுரையில் காய்கறி கடை நடத்திவரும் தன் அத்தையிடம் வேலைக்குச் செல்கிறார். ஒருநாள் இவர் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்கிறார். பணத்தை தராமல் சென்றது போலீஸ்காரர் என்று தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார். அதை தடுக்க வந்த போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார் அமரன்.

போலீஸூடன் சண்டை போட்டதால் அமரனின் அத்தை, அவரை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விடுகிறார். ரெயிலில் அமரனை சந்தித்த நாயகி சோனு, அவருடனே ஒட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ரெயிலை தவற விடுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்றதாக செய்தி வருகிறது. இதை அறியும் சோனுவின் தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தி, இவர்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

மறுநாள் விடிந்த பிறகு சோனு, அமரனிடம் நீ யார்? என்னை எதற்கு கடத்தினாய்? என்று சத்தம் போடுகிறார். அமரன் நடந்ததையெல்லாம் சோனுவிடம் விவரிக்கிறார். இதற்கு சோனு, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். இதற்கு சம்மதித்த என் தந்தையை சந்திக்க காதலனை அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு ரெயில் சென்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் என்று கூறுகிறார். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் காதலனையும் காணவில்லை என்று கூறி புலம்புகிறாள். காதலனை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு அமரனை கேட்கிறாள்.

அமரனும், சோனுவும் காதலனை தேடி அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு தன் அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி காதலனை கொன்றுவிட்டதாகவும், தன்னையும் கொல்ல தேடி வருகிறார் என்பதையும் அறிகிறார் சோனு.

இறுதியில் அமரனும், சோனுவும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது போலீஸ் அதிகாரியான சம்பத்திடம் சிக்கினார்களா? காதலிக்காத இவர்கள் இரண்டுபேரும் காதலித்தார்களா? என்பதே மீதிக்கதை.

அமராவாக நடித்திருக்கும் அமரன், நடனம், சண்டை, காதல் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகி சோனுவுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். வில்லனாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சம்பத் ஆகியோர் அவர்களுக்கே உள்ள பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையில் பாடல்களை ரசிக்கலாம். ராஜா முகமது ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. இயக்குனர் ஜீவன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘அமரா’ சுமார்

டிப் டாப் போலீசாக வேட்டையாடி விளையாடவுள்ள அஜித்!

தல அஜித் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கவுள்ளதாக ஏற்கெனவே பேசப்பட்டுவருகிறது. இப்படத்திற்கு அஜித் தனது உடல் எடையைக் குறைத்துவருவதாகவும், இதற்காக அவர் ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்துவருவதாகவும் கூறப்பட்டது.


இத்தனை விசயங்கள் பேசப்பட்டுவந்த போதும் கௌதம் மேனன் படத்தில் அஜித் எந்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்துவந்தது. தற்பொழுது அந்தத் தகவலும் வெளியாகிவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. கௌதம் மேனன் இயக்கவுள்ள இப்புதிய படத்தில் அஜித் இளம் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


இப்படத்தின் கதைக்கு ஃபிட்டாகவே மிகக் கடுமையாக உடற்பயிற்சி செய்துவருகிறார். விரைவில் ஸ்லிம்மான அஜித்தை ரசிகர்கள் பார்க்கலாம்.


மேலும் மங்காத்தாவில் தொடங்கி இதுவரை நடித்த நான்கு படங்களிலும் கொஞ்சம் நரைமுடி கலந்த, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கலக்கிய அஜித் இப்படத்தில் ஹேர் ஸ்டைலையும் மாற்றவுள்ளார்.


இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. அவை மெஹா ஹிட்டும் அடைந்தன. அஜித் போலீசாகத் தோன்றவுள்ள இப்படமும் ப்ளாக் பஸ்டர் படமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

கோச்சடையான் போன்கள் வெளியிடப்பட்டன!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகிவரும் கோச்சடையான் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக, கார்பன் மொபைல் போன் நிறுவனமும் கோச்சடையான் படக்குழுவும் இணைந்து, கோச்சடையான் காலர் டியூன்ஸ், பிக்சர்ஸ் மற்றும் தீம்ஸ் கொண்ட கார்பன் மொபைல் போன்களை இன்று வெளியிட்டுள்ளனர்.


நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ல் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.


இப்படத்தின் புரொமோசன் ஏற்பாடுகளில் முக்கியமாக, கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள், படங்கள் கொண்ட மொபைல் போன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 10 லட்சம் மொபைல் போன்களைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்தியாவிலேயே முதல்முறையாக கோச்சடையான் திரைப்படம்தான் மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது.


இப்படத்தின் ஆடியோ வருகிற மார்ச் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் சுமார் 6000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.

முதலில் கடத்தல்... அப்புறம் காதல்! - விருதுகள் காத்திருக்கின்றன!

ஆறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாய் திரையில் விரிகிறது 'ஹைவே’ பாலிவுட் படம். 'ஜப் வி மெட்’, 'ராக் ஸ்டார்’ படங்களால் கலக்கிய இம்தியாஸ் அலிதான் டைரக்டர். இந்திய சினிமாவின் மிக முக்கியமான 'ரோடு மூவி’ என தாராளமாகச் சொல்லலாம். கடத்தியவன் மீதே காதல்கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் டைப் கதை.


டெல்லியைச் சேர்ந்த பணக்காரரின் மகள், ஹீரோயின் அலியா பட். விடிந்தால் திருமணம் நடக்கும் சூழலில், தன் வருங்காலக் கணவனோடு காரில் ஹைவேஸில் செல்லும் ஆசையைச் சொல்லி இருவரும் கிளம்புகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து அவளைக் கடத்திச் செல்கிறது ஒரு கும்பல். கடத்தல் கும்பலில் இருக்கும் ரன்தீப் ஹூடா, அவளை வெவ்வேறு இடங்களுக்குத் தன்னுடைய டிரக்கில் வைத்து போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து அழைத்துச் செல்கிறார்.


 ஒரு கட்டத்தில் முதல்முறையாகத் தன் வாழ்க்கையில் முழு சுதந்திரத்தை உணர்கிறார் அலியா. பயணத்தின் நடுவே போலீஸ் செக்போஸ்ட்டில்கூட டிரக்குக்குள் ஒளிந்துகொண்டு ரன்தீப்பையும் அவர் சகாவையும் காப்பாற்றுகிறார் ஆலியா. சிடுமூஞ்சியான ரன்தீப்பிற்கு மோசமான இளம்பிராயம் இருப்பதை உணர்ந்து அன்பு காட்டுகிறார். ராஜஸ்தானின் பாலைவன மணல் வழி நெடுஞ்சாலையில் விரைந்த டிரக், உலகின் கூரையாய் இருக்கும் இமயமலைக்குச் செல்கிறது.


அங்கே அலியாவை இறக்கிவிட்டு ஓடிப்போகிறார் ரன்தீப். அவரை விடாமல் துரத்தி முதன்முறையாக ரன்தீப்பை சிரிக்கவைக்கிறார் அலியா. முடிவில் பனி படர்ந்த மலை உச்சியில் ஓர் அழகான வீட்டில் இருவரும் தங்குகிறார்கள். தாயன்பை அவள் மூலம் முதல்முறையாக உணர்கிறார் ரன்தீப். அழகான காதல் உருவாகிறது. மறுநாள் நாம் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.


'ஹைவே’ படம் இதுவரை காட்டாத அற்புதமான கேமரா கோணங்களைக்கொண்ட படம். 'லகான்’ கேமராமேன் அனில் மேத்தாதான் படத்தின் ப்ளஸ். அலியா பட், ரன்தீப் ஹூடாவின் நடிப்பு அபாரம். அழுக்கு உடையோடு படம் நெடுகிலும் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷனோடு வளையவரும் அலியா நம் எல்லோருக்கும் நெருக்கமானவராக மாறிவிடுகிறார். இந்த அலியா பட், பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் கடைசி மகள். படத்தில் கரை புரண்டு ஓடும் இமயமலை நதி நீரலைகளுக்கு நடுவே பாறையில் அமர்ந்துகொண்டு சந்தோஷத்தில் வெடித்து அழுவார் பாருங்கள். செம செம எக்ஸ்பிரஷன்.


இசை நம்ம ரஹ்மான். ஏற்கெனவே பாடல்கள் ஹிட். படத்தில் அவரின் பின்னணி இசை பிரமிக்கவைக்கிறது. ஆங்காங்கே 'இம்ப்ளோசிவ் சைலன்ஸ்’-ஆக வரும் அந்த சாலைப் பயணப் பின்னணி இசை வேறு உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்கிறது. அலியா பட்டையும் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடவைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் ரஹ்மான்.


கேமராவுக்கு முன் துருப்பிடித்த கம்பி போல நீண்டுகிடக்கும் சாலை. திரும்பத் திரும்ப சாலைப் பயணம் என அலுப்புத் தட்டாமல் இருக்க, ஆங்காங்கே 'ஹால்ட்’ அடித்துச் செல்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதியில் அந்தப் பயணம் இலக்கில்லாமல் போனாலும் இமயமலையில் முடிவடையும்போது இன்னும் கொஞ்ச நேரம் டிரக்கில் பயணித்திருக்கலாமோ என நம்மை நினைக்கவைக்கிறது. வழக்கமான கதைதான். அதைச் சொன்னவிதத்திலும் காட்சிப்படுத்திய விதத்திலும் 'ஹைவே’ நம்மை ஒரு ஜாலி ட்ரிப் போய் வந்த உணர்வைத் தருகிறது.


''மும்பையில் ஒரு ரூமுக்குள் நான் எழுதிய ஸ்கிரிப்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு இந்த ஆறு மாநில சாலைப் பயணத்தைத் தொடங்கவில்லை. நிஜத்திலும் அழுக்கு உடையோடு ஆலியாவும் ரன்தீப்பும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் என்னுடன் பயணித்தார்கள். இமயமலையில் அவர்களிடம் நான் சூழலை மட்டும் சொல்லி விட்டு அவர்கள் அதற்கு ரியாக்ட் செய்வதைப் படம் பிடித்தேன். கிட்டத்தட்ட கேண்டிட் படம் செய்த உணர்வைத் தந்தார்கள் இருவரும்'' என்று நெகிழ்கிறார் இம்தியாஸ்.

விருதுகள் காத்திருக்கின்றன

செல்வராகவனின் - அது ஒரு டவுசர் காலம்!

இளசுகளின் பல்ஸ் தெரிந்த இயக்குநர் செல்வராகவனின் டவுசர் காலம்.

ஆம்லேட்டைப் பிய்த்து அதில் சோற்றை உருட்டி வைத்துச் சாப்பிட்டிருப்பார்.

அடிக்கடி மழையில் ஆட்டம் போட்டு நனைந்து வந்து அப்பாவிடம் அடி வாங்கியிருப்பார்.

டயர் கொளுத்தி வட்டமாய் நின்று கேம்ப் ஃபயர் டான்ஸ் அப்போதே ஆடியிருப்பார்.

ஹிஸ்டரி சப்ஜெக்ட்டை விரும்பிப் படித்திருப்பார். ஆனால் ஆன்சர் ஷீட்டில் மட்டும் குழப்பி அடித்து ஹிஸ்டரி டீச்சருக்கு ஹிஸ்டீரியா வர வைத்திருப்பார்.

பாய் ஃப்ரெண்ட்ஸ் வைத்துக்கொண்டால் பிம்பிள்ஸ் வரும் அளவுக்கு அலர்ஜி என்பதால், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே வகைதொகையில்லாமல் நட்புப் பட்டியலில் வைத்திருப்பார்.

டி.எம்.எஸ் ரசிகராக, மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை எனப் பழைய பாடல்களாகப் பாடித் திரிந்திருப்பார்.

தன் தோழியைக் கண்டுகொள்ளாமல் நண்பனின் தோழியிடம் பேச அடிக்கடி முயற்சி செய்திருப்பார். இதனாலேயே அடிக்கடி பெஞ்சில் ஏறி நின்றிருப்பார்.

ஸ்கூலுக்கு மட்டம் போட வருண பகவானை வேண்டிக்கொண்டிருப்பார். மழை பெய்தால் 'நான் சொன்னதும் மழை வந்துச்சா?’ என உற்சாகமாய் வீட்டுக்குள் டான்ஸ் ஆடியிருப்பார்.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கடைசியாக ஓடி பல்பு வாங்கியிருப்பார். 'ஏன் செல்வா ஏன்?’ என யாரேனும் கேள்வி கேட்டால், 'ஓட ஓட ஓடத் தூரம் குறையல’ எனப் பாட்டாகவே பாடி ஒருபாட்டம் அழுதிருப்பார்.

டீச்சரோ, பக்கத்து கிளாஸ் திவ்யாவோ வந்து சொன்னால்தான் பரிட்சையை ஃபயரோடு எழுதுவார். இல்லை என்றால் வெள்ளைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு சோகமாய்க் கழுத்தை சாய்த்தபடி வாக்-அவுட் செய்திருப்பார்.

கேர்ள்ஸ் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இவரே 'அடிடா அவளை... வெட்றா அவளை’ என சில நேரங்களில் உக்கிரமாய் திட்டித் தீர்த்ததால், ஹெட்மாஸ்டரிடம் செமத்தியாய் அடி வாங்கியிருப்பார்.

முந்தின நாளே மக்-அப் பண்ணிவிட்டு வந்து க்ளாஸ் ரூமில் அயர்ந்து தூங்குவார். டீச்சர் எழுப்பிக் கேள்வி கேட்டால் கையைக் கட்டிக்கொண்டு அப்படியே ஒப்பித்து வாய் பிளக்கவைத்திருப்பார்!  

கோச்சடையான் அப்டேட்!

செளந்தர்யா இயக்கத்தில்  ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் , ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் நடித்துள்ள படம் 'கோச்சடையான்' . இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இது.


கடந்த அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது.


ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்  படத்திற்கு இசையமைத்துள்ளார். 'மன்னன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சொந்த குரலில் ஒரு பாடலை கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பு. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.


படம் குறித்து இயக்குநர் சௌந்தர்யா பேசும்போது, ''மார்ச் 9ம் தேதி சென்னையில் நடக்கும் கோச்சடையான் பாடல் வெளியீடு விழாவில் கோச்சடையான் கார்பன் போனை ரஜினி வெளியிட இருக்கிறார்.


கோச்சடையான் பட்ஜெட் பெரியதுதான்.என் இயக்கத்தில் அப்பா  தீபிகா படுகோனேயுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது ரொம்பவே சங்கடப்பட்டார்.


நாகேஷை நவீன முறையில் கோச்சடையானில் கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் புதுமை எல்லோரையும் ஈர்க்கும். ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அறிவிப்போம்'' என்று பேசினார்.