Sunday, 9 February 2014

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.


வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்

கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?

பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.


கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா. இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம் தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்.


புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.

பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

பாலா - கும்பகோணம், தஞ்சாவூர் கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம்!

கும்பகோணம், தஞ்சாவூர் பகுதி கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம். அவர்களில் திறமையானவர்களை தேடி கண்டறிந்து பாலா முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

 காரணம்? இயக்குனர் பாலாவின் அடுத்த படம் கரகாட்டம் சம்பந்தப்பட்டது. தமிழ்சினிமா வரலாற்றிலேயே கரகாட்டக்காரன் படத்தைதான் ஓப்பன் டென்ட்டரில் விட்டு வியாபாரம் செய்தார்கள். அப்பவே கோடிகளை அள்ளிய படம் அது.

அதற்கப்புறம் அதே டைப்பில் படங்கள் வந்தாலும், எதுவும் போஸ்டர் காசுக்கு கூட பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

 நாதஸ்வரம், கரகாட்டம் போன்ற கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் பர்பெக்ட் படைப்பாளியான பாலா அந்த பக்கம் தன் பார்வையை செலுத்தியிருப்பதும், அதற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் அந்த கலைஞர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.

 இனி அந்த கலை அழியாது என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த படத்தில் கரகாட்டக்காராக சசிகுமார் நடிக்கிறார். கரகாட்டக்காரியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

சும்மாவே இடுப்பை அந்த ஆட்டு ஆட்டுவார் ஸ்ரேயா. (மறந்திருந்தால் கந்தசாமியை ஒருமுறை தகவலை பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவும்) இந்த படத்தில் விடுவாரா?

 இருந்தாலும் பயிற்சி முக்கியம் என்று கூறிவிட்டாராம் பாலா. அவருக்கு பயிற்சி கொடுக்கவும், சசிகுமாருக்கு கற்றுக் கொடுக்கவும்தான் இந்த கரகாட்ட கோஷ்டிகளின் சென்னை பயணம்.

 ஆடுகிறவர்களுக்கு பெண்டு நிமிர்கிறதோ, இல்லையோ? சொல்லிக் கொடுப்பவர்கள் பாடு சுளுக்குதான்.

எனக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு?

சமீபத்தில் நடிகர் கிருஷ்ணா திருமணம் நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். அதன் பிறகு யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும் 3வதாக பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதைப்பற்றி யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நான் 3வதாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அது போலியான செய்தி. ஆனால் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்கு நான் பெருமை அடைகிறேன்.

இந்த முடிவிற்கு என் குடும்பத்தினர் ஆதரவு தருகின்றனர். இது தொடர்பாக எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

லாஜிக்கைப் பாருங்க பாஸ் !

நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும்.

 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ் ஏத்திக்கிறாரு. ஆனா படத்தோட முன்பகுதியில் ஸ்லீப்பிங் மோடுல உட்கார வெச்சு பற்பல கனெக்ஷன்ஸ் கொடுத்து சார்ஜ் ஏத்துறாரு விஞ்ஞானி ரஜினி. அப்புறம் எப்படி எலெக்ட்ரிக் போஸ்ட்ல இருந்து டைரக்ட்டா சார்ஜ் ஏத்துறாரு? ஆண்ட்ராய்டு போன்ல சார்ஜ் நிக்காதுனு தெரிஞ்சு பக்கத்துத் தெரு கடைக்குப் போனாலும்கூட சார்ஜரைக் கையில் எடுத்துக்கிட்டே சுத்துற நம்ம பசங்களுக்கு இது கூடவா தெரியாம இருக்கும்?

அடுத்து 'ஆரம்பம்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சி. ஸ்விஸ் பேங்க் அக்கவுன்டை அபேஸ் பண்ணக் கிளம்புகிற அஜித் - ஆர்யா டீம் பண்ற அலப்பறை இருக்கே... நைட் டிரெஸ் மாதிரி ஒரு கவுன் போட்ருக்காருங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக படு ஸேஃபான ஒட்டுமொத்த மீடியாவையும் கட்டிக்காக்கிற சர்வர் ரூமுக்குள்ளே ஏதோ செகண்ட் ஷோ சினிமாவுக்கு தியேட்டருக்குள்ள போற மாதிரி படு கேஷ§வலா ஆர்யா உள்ளே போறாரே, எப்படி? அந்தப் பக்கம் அஜித் உலக நாடே சென்சிட்டிவ் பிரைவஸியான பேங்க்னு சொல்ற அந்த பேங்க் மேனேஜராகவே ஆள் மாறாட்டம் பண்றார்.

அந்த மேனேஜரும் ஏதோ நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல ஆள் பிடிக்கிற டிராவல்ஸ் ஏஜென்ட்  கணக்கா, 'வாங்க சார், நம்ம பேங்க் ஸேஃப்டியானது, ராசியானது, நாணயமானது. அக்கவுன்ட் வெச்சுக்கலாம். பிம்பிள்ஸ் வராது, 10 வகையான பிராப்ளத்துக்கு நோ டென்ஷன்’னு பேரம் பேசிட்டு இருக்கார். அட எல்லாம் கற்பனைனாலும் அதிலேயும் ஒரு நியாயம் வேணாமா நியாயமாரே?

அடுத்ததா  'ஜில்லா’ படத்துல ஒரு சீன்ல விஜய் கார்ல வர்றார். டிரைவர் காரை ஓட்டிக்கிட்டு வர்றார். நல்லாக் கேட்டுக்கங்க, டிரைவர்தான் காரை ஓட்டிக்கிட்டு வர்றார். ஆனா டியூட்டி பார்க்கிற போலீஸான காஜல் அகர்வால் விஜய்யை மடக்கிப் பிடிச்சு லைசென்ஸ் எடுனு கேக்கிறாங்க. ஆத்தி. உள்ளே உட்கார்ந்திருக்கிற ஆளும் லைசென்ஸ் வெச்சுக்கணும்னு இந்தப் படத்தைப் பாத்ததுக்கப்புறம்தான்யா எனக்கே தெரியுது. யாருக்குத் தெரியும்... இதைப் பாத்துட்டு இனிமே பஸ்ல டிராவல் பண்றவங்களும் ஏன், கண்டக்டரும்கூட லைசென்ஸ் வெச்சுக்கணும்னு கவர்மென்ட்ல ஆர்டர் போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லீங்க.

இப்போ சொல்லுங்க... உங்க கண்ணு வேர்க்குதா இல்லையா?

வித்யா பாலனை ஓரம்கட்டுவார் நயன்தாரா! - ‘கஹானி’.

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மொசன் பிட்சர்சின் முதல் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படம் என்பதால் நீண்ட நாட்களாக நல்ல தலைப்புக்கு தேடி வந்தனர். தற்போது ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இப்படத்திற்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றி படக்குழு கூறும்போது, ‘பெண்களை கவரும் வண்ணம் உள்ள இக்கதையில் நயன்தாரா திறம்பட நடித்துள்ளார். மேலும் இந்தியில் வித்யாபாலன் நடித்து புகழ் பெற்ற பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகூட்டி வருகிறார்’ என்றனர்.

இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முளா ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பு கதைக்கு மிகவும் பொருந்த கூடிய தலைப்பு என்றார். இந்தியில் ‘கஹானி’ படத்துக்கு இணையாக பெயரும், புகழும் இப்படம் ஈட்டும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இப்படம் ‘அனாமிகா’ என்னும் தலைப்பில் உருவாகி வருகிறது. 

நான் எதையும் கொண்டு வரவில்லை - கமல் பேச்சு!

‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’ என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம். இவருடைய அடுத்தப்படைப்பாக ‘தரமணி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா, ‘தி சோல் ஆப் தரமணி’ என்னும் பாடலை எழுதி இசையமைத்து அவரே இந்தப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் இசைத்தட்டை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

பாரதிராஜா பேசும்போது, கமல் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தாலும் எனக்கு அவர் நெருங்கிய நண்பர், நான் அவருடன் நட்பாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானவர். ஆண்ட்ரியா பாடலை கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது. இயக்குனர் ராம் மிகவும் திறமையானவர். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கமல ஹாசன் பேசும்போது, நான் எல்லாதையும் வைத்து படம் எடுப்பதாக இயக்குனர் ராம் என்னைப் பற்றி கூறினார். ஏனென்றால் நான் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போது எதையும் கொண்டு போவதில்லை. நான் சினிமாவில் சம்பாதித்ததை திரும்பவும் சினிமாவுக்கே தருகிறேன். என்னைப் பொருத்தவரை என்னுடைய முதலீடு நான்தான் என்றார். ஆண்ட்ரியா பாடிய பாடலை கேட்டேன், நன்றாக இருந்தது. மேலும் இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.