Tuesday, 25 February 2014

உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்!

“தன்னுடைய புகழ் பெற்ற படமான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்..” என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார்.


தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், தற்போது மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லையாம். இசை இசைஞானி இளையராஜதான். படத்தின் கதை புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையாம்.


படத்தின் ஒளிப்பதிவை சஞ்சய் லோக்நாத் மேற்கொள்கிறார். இவர் புகழ்பெற்ற பழம் பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தின் மகன். எடிட்டிங் காசி விஸ்வநாதன். சரவணன் என்ற தயாரிப்பாளர் இதனைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.


அப்போது பேசிய இயக்குனர் மகேந்திரன், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.


கொஞ்ச நாட்களாக எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்னுடைய சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. உங்களுக்கெல்லாம் தெரிந்த கதை தான்.


என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். ‘உதிரிப் பூக்கள்’ என்ற தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதேபோல இந்தப்படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.


என் படங்களில் பெரும்பாலான வசனங்களை இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமாக வேண்டாம். நான் எடுத்த பெரும்பாலான எடுத்த மவுனக் காட்சிகளுக்கெல்லாம் தன் பின்னணி இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அதனால் தான் அப்படிச் சொன்னேன். அவர் இல்லாமல் என் படங்கள் எப்போதுமே இல்லை.


நானெல்லாம் சினிமா இயக்க வந்ததே விபத்துதான். ஏதோவொரு உந்துதலால் படம் இயக்க வந்தேன். அதற்கு முன் நிறைய படிச்சபிறகுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. ஆனால் அவர் ஒரு பிறவி மேதை’’ என்றார்.

மே 9ல் ரிலீஸ் ஆகிறதா 'விஸ்வரூபம் 2?'

'விஸ்வரூபம் 2' இந்த ஆண்டே வெளிவரும் என்று அறிவித்தார் கமல். ஆனால், தொழில் நுட்பப் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.


தற்போது  2014 மே 9ல் 'விஸ்வரூபம்2' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.


'விஸ்வரூபம்'  படம் ஆஃப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடப்பதாக கதை அமைப்பு பின்னப்பட்டிருந்தது. பட முடிவில் வில்லன் தப்பித்துப் போவதாக காட்டியிருந்தார் கமல். இப்போது அதன் தொடர்ச்சி இந்தியாவில் நடைபெறுகிறதாம்.


விஸ்வரூபத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளிடம் நடித்திருக்கிறார்கள்.


'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. 'விஸ்வரூபம்' படம் வெளியாகும் போதே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்தவர் ரவிச்சந்திரன். இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


'விஸ்வரூபம்' ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் சில தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிடப்பட்டது, 'விஸ்வரூபம்2' அனைத்து தியேட்டர்களிலும் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட, கமல் முயற்சித்து வருகிறார்.


'விஸ்வரூபம்' படத்தினை விட பிரம்மண்டமாக உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.


மே 9ல் 'விஸ்வரூபம்2' ரிலீஸ் ஆகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆரை புகழும் பாட்டு சிவாஜிகணேசன் பாடினார்!

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் நடிகை!

சமந்தா தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.


லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடக்கிறது.


ஏற்கனவே சித்தார்த், ஜீவா போன்றோருடன் நடித்து இருக்கிறார். விஜய், சூர்யாவுடன் நடிக்கும் படங்கள் ரிலீசானதும் தனது மார்க்கெட் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறார்.


அத்துடன் அஜீத் ஜோடியாக நடிப்பதும் அவரது கனவாக இருக்கிறது.


இதுகுறித்து டுவிட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு, சமந்தா எனக்கு அஜீத்துடன் நடிக்க ஆசை உள்ளது என்று பதிலளித்தார். விரைவில் அது நிறைவேறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

கமல்ஹாசனின் நாட்டுப்பற்று!


வருமானவரி துறை சார்பில் தேசிய கலைவிழா (2013-14) 2 நாட்களுக்கு சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி தலைமை தாங்கினார்.


நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வருமானவரி துறை இணை ஆணையர் ஜெயராகவன் வரவேற்று பேசினார். டைரக்டர் ஜெனரல் புலனாய்வு ஜெய்சங்கர், வருமானவரி துறை முதன்மை ஆணையர்கள் சேத்தி, கே.கே.மிஸ்ரா, வருமானவரி துறை ஆணையர் ஆறுமுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடிகர் கமல்ஹாசன் மற்றும் வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தேசிய கலைவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-


அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும். என் தந்தையாரும் எனக்கு அப்படி தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.


உண்மையில் வரி செலுத்துவது என்பது நாட்டின் கட்டமைப்புக்கு நம்முடைய பகுதியாக அல்லது பங்காக நினைத்து நாம் செலுத்த வேண்டும். நானும் அப்படி நினைத்து தான் செய்து வருகிறேன். அடிப்படையில் இந்த எண்ணம் இருந்தால் வரி செலுத்துவதில் எந்த பிரச்சினையும், தயக்கமும் வராது.


பல்வேறு பணி சுமைகளின் மத்தியில் தங்களது திறமைகளை வெளிகாட்ட வந்திருக்கும் உங்களிடத்தில் இருந்து தான் உண்மையான கலை மற்றும் திறமை வெளிவரும். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.

சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை!

ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் போதும், அதன் பிறகு அந்த படத்தின் கதையை தழுவியே கதை கேட்பார்கள் நடிகர்கள். அதேபோல் அதில் தங்களுடன் பணியாற்றிய நடிகர்-நடிகைகளையும் கூட்டணி சேர்த்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.


இதை ஆரம்பத்தில் கடைபிடிக்காத சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து, அதே பாணியில் கொஞ்சம் காதல், நிறைய காமெடி அதற்குள்ளே ஒரு மெசேஜ் என்ற விகிதத்தில் கதைகள் கேட்கிறார்.


அதனால் காமெடி ஒன்றையே இலக்காக வைத்து தனக்கு கதை பண்ணி முற்றுகையிட்ட அத்தனை டைரக்டர்களிடமும் கரெக்சன் சொல்லி அனுப்பி விட்டார். குறிப்பாக, முன்னணி கதாநாயகி என்பதை விடவும், வெற்றி படங்களில் நடித்த நடிகையாக இருக்க வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டுகிறாராம்.


இதற்கெல்லாம் மேலாக காமெடியன் சூரி கட்டாயம் வேண்டும் என்கிறாராம். ஒரு மாறுதலுக்காக சந்தானத்தை சேர்த்துக்கொள்ளலாமே? என்று யாராவது சொன்னால், காமெடியனை நான்தான் கலாய்க்க வேண்டும். அதற்கு சூரி உடன்படுவார்.


ஆனால், சந்தானம் அவர்தான் கதாநாயகர்களை கலாய்க்க ஆசைப்படுகிறார். அதனால் அவர் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்கிறாராம். இதன்காரணமாக, சிவகார்த்திகேயன் கேட்டு வைத்துள்ள மூன்று கதைகளிலுமே காமெடி ஏரியாவுக்கு சூரிக்குதான் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதியானது!

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா.


அதன்பிறகு பாலிவுட்டில் பிசியாகி விட்ட அவரை எந்த இயக்குனரும் தமிழுக்கு கொண்டு வரவில்லை.


இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வருகிறார் பிரியங்கா சோப்ரா.


முன்னதாக, அந்த படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனேயைத்தான் கேட்டார்கள்.


ஆனால் அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற கணக்கில் சம்பளம் கேட்டதால், இவர் கோடம்பாக்கத்துக்கேற்ற கோவக்காய் இல்லை என்று கட் பண்ணி விட்டு, இப்போது பிரியங்கா சோப்ராவை பேசியுள்ளார்களாம்.


பிரியங்காவும் இப்போது பாலிவுட்டில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகைதான் என்றபோதும், கோடம்பாக்கத்தின் பட்ஜெட்டுக்கேற்ப விட்டுக்கொடுத்துள்ளாராம். மறுபடியும் தமிழில் நடிக்கிறோம் என்பது மட்டுமின்றி, தனது முதல் பட நாயகனான விஜய்யுடன் மீண்டும் இணைப்போகிறோம்


என்று இரட்டிப்பு சந்தோசமும் இதற்கு காரணமாம். அதனால் காலம் தாழ்த்தாமல், கதையை சொல்லி அட்வான்சையும் கைமாற்றி விட்டார்களாம்.

சிவகார்த்திகேயனுடன் அனிருத் ஆட்டம்!

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா மொத்வானி ஜோடியாக நடிக்கும் படம் "மான் கராத்தே" இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்குகிறார்


.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கானா பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளாராம் அனிருத்.


அந்த பாடலை பாட வித்தியாசமான குரலை தேடிவந்த இவருக்கு ‘கானா’ என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் இசையமைப்பாளர் தேவா நினைவுக்கு வர உடனே அவரை தொடர்பு கொண்டு இப்பாடலை பாடிக் கொடுக்க சம்மதம் கேட்டுள்ளார். அவரும் உடனே சம்மதித்து பாடிக் கொடுத்துள்ளார்.


இப்பாடல் படத்தின் கிளைமாக்சில் இடம்பெறுகிறதாம்.


 இது இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து அனிருத்தும் ஆடியுள்ளாராம்.


ஏற்கெனவே அனிருத், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போனார்


. அதன்பிறகு ‘வணக்கம் சென்னை’ படத்தில் கேங்ஸ்டர் என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ‘மான் கராத்தே’ படத்தில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.

13 படங்கள் வரும் 28ந் தேதி ரிலீஸ்!

கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சுமார் 200 படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீசாகவில்லை. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை அறிவித்து இருந்தனர்.


 அதில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும்.


இதில் டப்பிங் படங்கள் இந்த வரைமுறைக்குள் வராது.


அறிவிப்பு வெளியான முதல் வெள்ளிக்கிழமையே 13 படங்கள் ரிலீசாவது திரையுலகிற்கு சின்ன அதிர்ச்சி தான்.


இந்த படங்களில் வல்லினம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் மட்டுமே மீடியம் பட்ஜெட் படங்கள். அதைத்தவிர பனிவிழும் மலர்வனம், அமரா, தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை வங்கங்கரை ஆகியவை சிறு பட்ஜெட் படம்.


வெற்றி மாறன் (மலையாளம்), நான் ஸ்டாப், பறக்கும் கல்லரை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் (ஆங்கிலம்) கரன்சி ராஜா (தெலுங்கு) ஆகிய படங்களும் ரிலீசாகிறது.


தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன.


இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது.



இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

தெலுங்கு செல்லும் ’சுமார் மூஞ்சி குமாரு’..!

விஜய்சேதுபதி-சுவாதி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா".


இப்படத்தில், விஜய்சேதுபதி “சுமார் மூஞ்சி குமாரு” என்றொரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார்.


தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.


தெலுங்குப் படத்துக்கு இதே பெயரை தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் பாலகுமாராவுக்குப் பதில் பாலகிருஷ்ணா. விஜய் சேதுபதிக்கு ஆந்திராவில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


இருந்தாலும், படத்தின் நாயகி சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு அங்கு நல்ல மார்கெட் இருக்கிறதாம். அந்த மார்கெட்டை நம்பி தெலுங்கில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.


வரும் மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் தெலுங்குப் பதிப்பின் பாடல்களையும் பின்னர் அதே மாதத்திலேயே படத்தையும் வெளியிடப் போகிறார்களாம். தற்போது இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம் 

கோடை விடுமுறைக்குள் 'ஐ'.! - சங்கர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் படம் 'ஐ'. இப்படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர் இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


இது குறித்து 'ஐ' படக்குழுவினர் கூறுகையில் படத்தை கோடை விடுமுறைக்குள் திரையிட திட்டமிட்டுள்ளோம்.


இதனால் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம் படத்திற்காக போஸ்ட் புரடக்டசன் வேலைகள் 24 மணி நேரமும் நடந்துவருகிறது ,மேலும படத்தின் முதல் பாதியை விக்ரம் டப்பிங் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.


இந்த படத்தில் விக்ரம் வெவ்வேறு கெட்டப்பில் நடித்துள்ளதால் இரண்டாவது பாதியை குரல் வித்தியாசத்துடன் அடுத்த மாதம் டப் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமோடு போட்டியிட முடியாமல் தவிக்கும் எமி ஜேக்சன்!

ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரமோடு இணைந்து நடித்துவரும் எமி ஜேக்சன் சமீபமாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னால் விக்ரமோடு போட்டி போட்டு நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.


தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான விக்ரம் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்துவரும் திரைப்படம் ஐ.


இப்படத்தில் விக்ரம் மூன்று விதமான வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது கெட் அப் சேஞ்ச்களுக்காகவே இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இத்தனை நாட்களாக தொடர்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


கட்டுமஸ்தான உடலமைப்புக் கொண்டவராகவும், பின்னர் மிகவும் ஒல்லியானவராகவும் இப்படத்தில் அவர் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.


இப்படத்தின் நாயகியான எமி ஜேக்சன் விக்ரமைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். விக்ரம் மிகச் சிறந்த நடிகர் என்றும், தன்னால் அவருடன் போட்டியிட முடியாது என்றும், ஒருவேளை அவருடன் போட்டியிட வேண்டுமானால் தனக்கு இன்னும் பத்தாண்டுகள் அனுபவம் தேவைப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் விக்ரம் தனக்கு ஒரு முன்மாதிரி நடிகர் என்று கூறியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவரது தோற்றம் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.


ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் இயக்குனர் தரணி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.