Saturday, 1 March 2014

ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!



ஹன்சிகாவுடனான காதல் முறிந்து விட்டது இனி இருவருக்கும் இடையே ஆனா நட்பு மட்டும் தொடரும் என்று சிம்பு அறிவித்த நாள் முதலே இவர்களின் காதல் முறிவுக்கான காரணங்களாக பல்வேறு கட்டுக்கதைகள் எழுந்தன.


காதல் முறிந்ததற்கு ஹன்சிகாவின் அம்மா தான் காரணம் என்று சிம்பு தரப்பிலும், 'ஹன்சிகாவை சிம்பு மிரட்ட ஆரம்பித்ததால் தான்' , இந்த பிரிவு என்று ஹன்சிகா தரப்பிலும், அப்படி இல்லை 'சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து கொண்டு தான் இந்த காதல் முறிவை அறிவித் தார்கள்' என்று மற்றொரு கிசுகிசு தரப்பும் கூறிவந்தது.


இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில்,


 "ஹன்சிகாவின் நலன் கருதி நான் தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.இப்போதும் கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் "

""வல்லினம் - வாகைசூடிடும் வசூல்இனம்!


"உலகளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியையாவது கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் தாருங்கள்... என அறைகூவல் விடுக்கும் வகையில், கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து "ஈரம் அறிவழகன் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வெற்றிபடம் தான் ""வல்லினம்!

கதைப்படி, திருச்சியில், ஒரு கல்லூரியில் "பி.சி.ஏ., படிக்கும் நகுலன், பெரும் கூடைப்பந்து விளையாட்டு வீரர். ஒருநாள் போட்டி மைதானத்தில் நகுலன் வீசும் பந்து, இதயபலவீன நண்பர் கிருஷ்ணாவின்(கெஸ்ட் ரோல்) உயிரை பறிக்கிறது. அது முதல் பேஸ்கட்பாலை தொடுவது இல்லை... என சபதம் ஏற்கும் நகுலன், கோட்ச் ஆதி(இவரும் கெஸ்ட் ரோல்), ""இதய பலவீனத்தால் தான் கிருஷ்ணா இறந்தார்...என எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், சென்னையில் உள்ள நேஷனல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்க வருகிறார்.

மீரா எனும் மிருதுளாவின் காதலும், குணா எனும் அம்ஜத்தின் நட்பும், ஜெகனின் காமெடி தோழமையும் கிடைக்கிறது. கூடவே அந்த நேஷனல் கல்லூரியே கொண்டாடும் வகையில் இரண்டு ஆண்டுகளாக அந்த கல்லூரிக்கே கிரிக்கெட்டில் வெற்றி கோப்பை வாங்கி தந்திருக்கும் சீனியரான கிரிக்கெட் டீம் கேப்டனுடனும் அவர் தலைமையிலான கிரிக்கெட் டீமுடனும் முட்டலும் மோதலும் ஏற்படுகிறது. தன் நண்பர்கள் குணா, ஜெகன் எல்லோரும் வெற்றிக்கனியை தட்டிபறிக்க முடியாத கூடைப்பந்தாட்ட வீரர்கள், இவர்களது எதிராளிகளோ வெற்றிகரமான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள்... எனும் நிலையில், நண்பனின் மரணத்தால் கூடைப்பந்து விளையாட்டை கைவிட்ட நகுலன், நண்பர்களின் வெற்றிக்காக மீண்டும் கூடைப்பந்தை கையில் எடுக்கிறார்.

அதுநாள் வரை கிரிக்கெட்டிற்காக பேசப்பட்ட நேஷனல் கல்லூரி, கூடைப்பந்திற்காக பதக்கம் பெற்றதா? நகுலனும், நண்பர்களும் மாநில் அளவில் வெற்றி பெற்றார்களா? அதற்கு கதாநாயகி மிருதுளாவின் உதவி என்ன? கிரிக்கெட் கோஷ்டியின் உபத்திரம் என்னென்ன?, கூடைப்பந்து கோச் அதுல் குல்கர்னியின் அர்ப்பணிப்பு எப்படி.? என்பது உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் கலந்து கட்டி "வல்லினம் படத்தை வெற்றி இனம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்!

நகுலன், கூடைப்பந்தாட்ட வீரராக பட்டையை கிளப்பியிருக்கிறார். நட்பு, காதல், மோதல், பாசம் எல்லாவற்றிலும் கைதேர்ந்த நடிகராக வளர்ந்திருக்கும் நகுலன், முந்தைய படங்களின் தோல்வியை "வல்லினம் வெற்றிமூலம் ஈடு கட்டிவிடுவார் என நிச்சயம் நம்பலாம்!

மீராவாக வரும் மிருதுளா ஹோம்லி குத்துவிளக்கு. குணாவாக வரும் அம்ஜத், சுந்தர், கோச்-அதுல் குல்கர்னி, அமைச்சர் சந்தான பாரதி, கல்லூரி முதல்வர் ஓய்ஜி மகேந்திரன், நாயகியின் தந்தையும், பெரும் தொழிலதிபருமான ஜெயப்பிரகாஷ், வில்லன் கிரிக்கெட் கேப்டன், அவரது அண்ணனாக வரும் தற்போதைய கமலா திரையரங்க அதிபர்களில் ஒருவர் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஜெகனின் "அவுட்ஸ்டேண்டிங் பிளேயர்... எனும் அளவான காமெடி, சந்தானபாரதி, நமக்கு அந்த விளையாட்டெல்லாம் தெரியாது, நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு விளையாட்டு தான் என்று போனில் பேசியபடியே அங்கு கிராஸ் ஆகும் பெண் உதவியாளரை பார்க்குமிடம், ஒய்ஜிஎம், தன்னை மாணவர்கள் மிரட்டி சென்றதும் வீட்டிற்கு போன் செய்து, தன் மகளை கம்பியூட்டரில், டுவிட்டரில் இருந்து எழும்ப செய்வதும் தியேட்டரில் கைதட்டல் சிரிப்பு அதிர்வை ஏற்படுத்துகிறது. இது மாதிரி பல காட்சிகள் படத்தில் இடம் பிடித்திருப்பது "வல்லினம் படத்தின் பெரும்பலம்!

தமனின் இனிய இசை, கே.எம்.பாஸ்கரனின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகளுடன், இயக்குநர் அறிவழகன், கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் பிற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் வேண்டுமென ஒவ்வொரு காட்சியிலும் போராடியிருக்கும் விதம், போரடிக்காமல் பேர் சொல்லும் விதமாக இருப்பது தான் வல்லினம் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி!

கூடைப்பந்தாட்டத்திற்காக போராடும் இப்படத்தின் முதல் காட்சியிலேயே கிருஷ்ணா, நகுலன் எறிந்த கூடைப்பந்தால் நெஞ்சில் பட்டு (என்ன தான் இதய பலவீனக்காரர் என்றாலும்...) இறப்பது, உள்ளிட்ட ஒரு சில குறைகள், நெருடல்கள் இருந்தாலும், கிரிக்கெட் சூதாட்டம் என்பதையும், அதில் அதிகம் அக்கறை காட்டாத அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் உலகின் வல்லரசுகளாக வலம் வருவதையும் சொல்லாமல் சொல்லி இருக்கும் இயக்குநர் அறிவழகனின்.

 ""வல்லினம் - வாகைசூடிடும் வசூல்இனம்!

""தெகிடி - ""திகட்டலைடி! மிரட்டுதடி!! - விமர்ரசனம்!

"அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் உள்ளிட்ட வெற்றிபடங்களையும், வித்தியாச படங்களையும் தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாச வெற்றித்தயாரிப்பு தான் ""தெகிடி

கதைப்படி, கதையின் நாயகர் வெற்றி எனும் அசோக் செல்வன், கிரிமினாலஜி படித்துவிட்டு உயிருக்கும், உடைமைக்கும், திறமைக்கும் சவால் விடும்படியான துப்பறியும் வேலை பார்க்க துடிப்புடன் சொந்த ஊரான தஞ்சாவூரில் காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே சென்னையில் உள்ள ஒரு தனியார் டிடக்டீவ் ஏஜென்சியில் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அப்பாவிடம் சொல்லிவிட்டு சென்னை கிளம்புகிறார்.

சென்னை சென்றடைந்ததும், தன்னை படிக்கும்போதே புத்திசாலியாக ஒப்புக்கொண்ட பேராசிரியரின் ஆசியை பெற்றுக்கொண்டு அந்த தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். வேலைக்கு சேர்ந்த உடனேயே சிலரது புகைப்படங்களும், அவர்களது முகவரியும் வெற்றியிடம் தரப்படுகிறது. அவர்களைப்பற்றிய ஏ "டூ இசட் டீடெயில்களை விசாரித்து துப்பறிந்து அந்த நிறுவனத்தில் நல்ல பெயர் எடுக்கிறார் வெற்றி. ஒரு சில அசைமென்ட்டுகளுக்கு அப்புறம் மது எனும் ஜனனி ஐயரின் புகைப்படத்தையும் அவரிடம் வழங்கும் அந்நிறுவனம், அவர் பற்றி தகவல்களையும் துப்பறிய சொல்கின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை வெற்றி, தன் துப்பறியும் பணிக்காக கமலக்கண்ணன் என்பவரது வீட்டை கள்ளத்தனமாக திறக்க முற்படும்போது வெற்றியை பார்த்துவிட்டு அவரை திருடனாக கருதுகிறார் மது அலைஸ் ஜனனி ஐயர். தன்னை பின் தொடரும் வெற்றி எனும் அசோக் செல்வனை பார்த்துவிட்டு சப்தம் போடுகிறார். வெற்றி அவரது வீட்டிற்கே போய் மது "அலைஸ் ஜனனியை சமாதானம் செய்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. ஒரு பக்கம் ஜனனி ஐயரைப்பற்றி தகவல்களை திரட்டிக்கொண்டே மற்றொரு பக்கம் அவருடன் லவ் டூயட் என்று காதலிலும் உலா வருகிறார் "வெற்றி அசோக் செல்வன்.

இந்நிலையில் வெற்றி தன் துப்பறியும் நிறுவனத்திற்காக தகவல் திரட்டி தந்தவர்கள் வரிசையாக விபத்தில் மரணமடையும் செய்திகளை பார்க்கும் இவர், அதிர்ச்சி அடைகிறார். அது பற்றி துப்பறிய கிளம்பும் வெற்றி,கண் முன்னே இன்னும் சில கொலைகளை விபத்தாக பார்க்கிறார். எல்லாமே தான் துப்பறிந்து தந்த மனிதர்கள் என்பதால் மேலும் திகிலடைகிறார் வெற்றி எனும் அசோக் செல்வன்!

தான் வேலை பார்த்த டிடெக்டீவ் ஏஜென்சி மீது சந்தேகம் கொண்டு அவர்களைத்தேடி ஆக்ரோஷத்துடன் புறப்படுகிறார். அவர்கள் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு "எஸ் ஆகி விடுகின்றனர். தன்னையும், தன்னால் துப்பறியப்பட்ட தன் காதலியையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஹீரோ, இச்சமயத்தில் கமலக்கண்ணன் இறப்பதற்கு முன் அவருடன் இறுதியாக செல்போனில் பேசிய காரணத்திற்காக அறை நண்பருடன் கைது செய்யப்படுகிறார். காதலி ஜனனிக்கு மொத்த உண்மையும் தெரிய வருகிறது. முதலில் கோபம் கொள்ளும் அம்மணி, ஒருவழியாக சமாதானமாகி வெற்றியின் பேராசிரியர் உதவியுடன் அசோக்கையும், அவரது நண்பனையும் ஜாமினில் எடுக்கின்றனர்.

லாக்கப்பில் இருந்து வெளியில் வரும் வெற்றி-அசோக், தனது இந்த நிலைக்கு காரணமானவர்களை, தன்னை கைது செய்த போலீஸ் ஜெ.பி. உதவியுடனும், அவரது உதவி இல்லாமலும் சட்டத்தின் முன் நிறுத்தவும், விபத்து என ஜோடிக்கப்பட்டு இத்தனை கொலைகளுக்கான நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முற்படுகிறார். அவர்களது நோக்கம் படம் பார்க்கும் நமக்கும் பகீர் என்றிருப்பது "தெகிடி படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி!

ஒருவழியாக ஹீரோ மோசமானவர்களில் முக்கியமானவர்களான அத்தனை பேரையும் திட்டமிட்டபடி சட்டத்தின்முன் நிறுத்தினரா.? தண்டனை தந்தாரா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், எதிர்பார்க்காத திருப்பங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டிருக்கிறது. வாவ்! சூப்பர்!!

ஹீரோவாக வெற்றியாக அசோக் செல்வன், தமிழ்வாணன் நாவல்களில் படித்த துப்பறியும் சங்கர்லாலை நம் கண்முன் காட்சிக்கு காட்சிக்கு நிறுத்துகிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், இவர் அறிமுகமான "வில்லா படத்தை காட்டிலு<ம் "நல்லா நடித்திருக்கிறார். "கீப்-இட்டு அசோக்!

மதுவாக ஜனனி ஐயர், சபாஷ் ஐயர் எனும்படி கண்களாலேயே அத்தனை பாவங்களையும் வெளிப்படுத்தி ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார். போலீஸ் ஆபிஸர் ஜெயப்பிரகாஷ், சைலேஷ் - ஜெயக்குமார்,நண்பர் நம்பியாக வரும் கலை, சாய் - கமலக்கண்ணன், பேராசிரியர் சடகோபன், மாதவன், சக்கரபாணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்து பலே சொல்ல வைத்திருக்கின்றனர்.

தினேஷ் கிருஷ்ணனின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, நிவாஸ் கே.பிரசன்னாவின் மிரட்டும் இசை, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு, புதியவர் பி.ரமேஷின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் வரிசையில் தெகிடியையும் தயாரிப்பாளர்களுக்கு வெற்றி படமாக்கியுள்ளதென்றால் மிகையல்ல!

ஆகமொத்தத்தில், ""தெகிடி - ""திகட்டலைடி! மிரட்டுதடி!!

விரைவில்...நீட் பார் ஸ்பீட் (ஆங்கிலம்)

கார் பந்தயம், கொலை, சிறை, பழி வாங்குதல் என, படம் துவங்கியதில்இருந்து, முடியும் வரை, இருக்கையை விட்டு, எழ முடியாத அளவுக்கு, பரபரப்பும், திகிலும் நிறைந்த காட்சிகளின் சங்கமமாக, இந்த படத்தை உருவாக்கியுள்ளார், இயக்குனர், ஸ்காட் வாக்.


சட்ட விரோத கார் பந்தயத்தில் ஈடுபடும் ஹீரோவின் நண்பன், எதிரிகளால் கொலை செய்யப்படுகிறான். இந்த பழி, ஹீரோ மீது விழுகிறது.


சிறையில் இருந்து விடுதலையாகும் ஹீரோ, நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க புறப்படுகிறான்.


இது தான், படத்தின் கதை. ஆரோன் பால், டாமினிக் கூப்பர் போன்ற அதிரடி நடிகர்கள் நடித்துள்ளதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வனவிலங்குகளிடம் சிக்கினார்? சினிமா பட கலை இயக்குனர் !

தமிழ் சினிமாபட உலகில் கலை இயக்குனராக இருந்து வருபவர் வினோ மிர்தாத். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக மதுபானக்கடை உள்பட பல்வேறு சினிமா படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் கோவையை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரி மலை குறித்து பல்வேறு குறும்படங்கள் எடுத்துள்ளார்.

சிவராத்திரி விழாவையொட்டி வினோ மிர்தாத் வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மலையில் இருந்து இறங்கும்போது 6-வது மலை பகுதியில் அவர் பாதை மாறி வனப்பகுதிக்குள் தனியாக சென்று விட்டதாக தெரிகிறது. காலை 9.30 மணி அளவில் வழி மாறி வந்துவிட்டதாக இயக்குனர் கமலக்கண்ணனுக்கு அவர் செல்போனில் தகவல் கொடுத்தார்.

இதன் பேரில் கமலக்கண்ணன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் உதவியுடன் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிங்கிரிமலை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைப்புலி, செந்நாய்கள் மற்றும் பல வனவிலங்குள் உள்ளன. அதனால் வனப்பகுதிக்குள் தனியாக சென்ற அவர் வனவிலங்குகளிடம் சிக்கினாரா? அவரது கதி என்ன என்று தெரியவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வினோ மிர்தாத் வெள்ளிங்கிரி மலைக்கு தனியாக சென்றுள்ளார். அவர் வெள்ளிங்கிரி கோவிலுக்கு சென்றிருந்தால் காணாமல் போவதற்கோ வழி மாறி செல்வதற்கோ வாய்ப்பு இல்லை. அவர் வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம்.

இருப்பினும் தற்போது 3 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மாயமான வினோ மிர்தாத்தின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

'மொழிவது யாதெனில்' படத்தில் அதிசய வேடம் ஏற்கும் நடிகர்!

'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தேஜ். மேலும் 'காந்தம்', 'காதலுக்கு மரணமில்லை', 'விண்ணைத் தொடு' ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.


இதற்கிடையில், 'மொழிவது யாதெனில்' என்னும் புதிய படம் ஒன்றில் முழுக்க முழுக்க மாறுபட்ட கதாபாத்திரத்தில் தேஜ் நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக நடிக்கிறார். இதற்காக பலரது குரலில் பேசுவதற்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் குரலில் மட்டும் இன்றி, அவர்கள் பேசும் போது அவர்களது பாடி லேங்வேச் எப்படி இருக்கும், போன்ற விஷயங்களையும் உண்மையான மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுடன் பழகி, நுணுக்கமாக அறிந்து வருகிறார். மேலும் அதிரடியான சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.


பல வாய்ப்புகள் வந்தபோதும் நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் தேஜ்.


மொழிவது யாதெனில் படத்தை தயாரிக்கும் மாணிக்கவாசன் ஒரு கராத்தே வீரர் என்பதால், ஆக்சன் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருந்துள்ளார். அதற்கு ஏற்ப கதையும், ஹீரோவும் கிடைத்துவிட, படத்தை படு ஜோராக தொடங்கிவிட்டார். மிமிக்ரி செய்ய பல நாட்கள் பயிற்சிகளை மேற்கொண்ட தேஜ், சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கவும், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் பல ரிஸ்க்கான காட்சிகளை ரியலாக செய்து, ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வம் உள்ளிட்ட படக்குழுவினரை அசத்தி வருகிறார். இப்படத்தை கோபால் என்பவர் இயக்குகிறார்.


'மொழிவது யாதெனில்' படத்திற்குப் பிறகு தேஜ், மாஸ்டர் மகேந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'விரைவில் இசை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதையும், தேஜின் கதாபாத்திரமும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

அலர்ஜியாகுதே அழகு!

அழகுசாதனங்களும் கிட்டத்தட்ட உயிர் காக்கும் மருந்துகள் மாதிரிதான். மருந்துகளை வாங்கும்போது, அவற்றின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி,  பேக்கிங் என எல்லாம் சரி பார்த்து வாங்குகிறோமில்லையா..? ஒருவருக்கு சரியாக வருகிற மருந்துகள், இன்னொருவருக்கு பிரச்னையைக்  கொடுப்பதில்லையா? அது போலத்தான் அழகு சாதனங்களும்... அலர்ஜி வராமலிருக்க, அழகு சாதனங்களை வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும்  சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி விளக்குகிறார் கிரீன் ட்ரென்ட்ஸ் மல்லிகா.

அழகுசாதனங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்கள், நிறமிகள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் ஒவ்வாமை உண்டாகிறது. இது சாதாரண  பவுடரில் தொடங்கி, ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக், ரூஜ், ஐ லைனர், ஐ ஷேடோ, ஹேர் கலர்ஸ் என எல்லாவற்றிலும் வரலாம். ஒருவருக்கு  ஒத்துக்கொள்ளாத அழகு சாதனம், இன்னொருவருக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகலாம். எனவே, ஒவ்வாமை என்பது நபருக்கு நபர் வேறுபடும்.

ஹேர் டை - ஹேர் கலர் அலர்ஜி

அழகுசாதனங்களில் அதிகமான அலர்ஜியை உண்டாக்கக்கூடியவை ஹேர் டை மற்றும் ஹேர் கலர்கள். காரணம், அவற்றில் உள்ள ஸ்ட்ராங்கான  கெமிக்கல் கலவை. பிபிடி, பிஏடிஏ, அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவை எல்லோருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றில்  பிபிடி என்பது டார்க் கலர் டைகளிலும், பிஏடிஏ என்பது லைட் கலர்களிலும் பிரதானமாக இருக்கும்.

அதனால், டை உபயோகிப்பதற்கு முன், ‘பேட்ச் டெஸ்ட்’ என்பது மிக முக்கியம். டையில் சிறிதளவை எடுத்து, காதின் பின்புறம் சிறிது தடவி, 24 மணி  நேரம் காத்திருக்க வேண்டும். கண்கள் சிவப்பது, அரிப்பு, எரிச்சல், கண்களில் தண்ணீர் வடிதல்,     வீங்குதல், மயக்கம் மாதிரியான ஏதேனும் பிரச்னை  தெரிந்தால், அந்த டை அலர்ஜியை உண்டாக்கும் என அர்த்தம். அதை உபயோகிக்கக் கூடாது. இப்போது அமோனியா இல்லாத ஹேர் கலர்கள்  கிடைக்கின்றன. ஆனால், இவை தற்காலிக மானவை. நிரந்தர ஹேர் கலர்கள், முடியின் உள்ளே ஊடுருவி, முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் என்றால்,  இந்தத் தற்காலிக கலர்கள், முடியின் மேல் பகுதியில் மட்டும் படிந்து நிறத்தைக் கொடுக்கும்.

அமோனியா இல்லாததாலேயே அது எல்லோருக்கும் ஒப்புக் கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. அதுவுமே சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.  டை அலர்ஜி உள்ளவர்கள், ‘ஹென்னா’ போன்ற இயற்கை கலர்களுக்கு மாறுவதே பாதுகாப்பானது. டை ஒப்புக் கொண்டாலுமே, அதை புருவங்களில்  போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கண்களுக்குப் பக்கத்தில் உள்ள பகுதி என்பதால், அதன் விளைவாக பார்வை பாதிப்பு வரக்கூடும். ஜாக்கிரதை!

பிளீச் அலர்ஜி

டைக்கு அடுத்தபடியாக அலர்ஜியை உண்டாக்கும் அழகுப்பொருள் பிளீச். ஃபேஷியலுக்கு முன் செய்யப்படுகிற ஒரு சிகிச்சையே பிளீச். இதைச்  செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் சருமம் நிறம் கூடிய தோற்றத்தைப் பெறும். இந்த  பிளீச்சுமே கெமிக்கல் கலவையால் செய்யப்படுவது என்பதால் எல்லோருக்கும் பொருந்தாது. டைக்கு செய்யப்படுவது மாதிரியே பிளீச் செய்வதற்கு  முன்பும் கைகளில் அதைத் தடவி, பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து, அரை மணி நேரம் காத்திருந்து, அலர்ஜி இல்லாவிட்டால் மட்டுமே உபயோகிக்க  வேண்டும்.

பிளீச், ஃபேஷியல் என எல்லாமே அவரவர் வீட்டி லேயே செய்துகொள்ள வசதியாக கடைகளில் கிடைக்கின்றன. அந்த பாக்கெட்டுகளின் மேல் எப்படிக்  கலப்பது, எப்படி உபயோகிப்பது என்கிற குறிப்புகள் இருக்கும். அந்தக் குறிப்புகள் எல்லா வகையான சருமத்துக்கும் பொதுவானவை. ஆனால், பிளீச்  என்பது ஒவ்வொரு வகை சருமத்தின் தன்மையைப் பார்த்து, அதற்கேற்ற அளவில் கலக்கப்பட்டு செய்யப்பட வேண்டியது. கலவை சற்று கூடினாலும்  சருமம் பாதிக்கப்படலாம். பெரும்பாலும் இந்த மாதிரி சிகிச்சைகளை பார்லர்களில் செய்து கொள்வதே பாதுகாப்பானது.

வாக்சிங் அலர்ஜி

வாக்சிங் செய்ததும் சிலருக்கு சருமத்தில் சிறிய தடிப்புகள், கொப்புளங்கள் வரலாம். சருமம் சிவந்து போகலாம். அது பெரும்பாலும் சில மணி  நேரங்களில் தானாக சரியாகிவிடும் என்பதால் கவலை வேண்டாம். அலர்ஜி உண்டானால் அந்த இடத்தில் கற்றாழை ஜெல் தடவுவது, ஐஸ் கட்டிகள்  வைத்துத் தேய்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ‘அப்படியெல்லாம் இல்லை... எப்போதுமே வாக்சிங் செய்தால் ஒத்துக் கொள்வதே இல்லை... ஆனால்,  கை, கால்களில் ரோமங்களுடன் இருக்கவும் முடியாது’ என்கிறவர்கள், சிகிச்சைக்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசித்து, அலர்ஜியை தவிர்க்கும்  மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். பார்லர்களில் வாக்சிங் செய்கிற போது, சுத்தமான டவல் உபயோகித்ததும் தூக்கி எறிகிற டிஸ்போசபிள் வாக்ஸ்  ஷீட் உபயோகிக்கிறார்களா என்பதை சரி பார்க்கவும்.

இன்னும் சில அலர்ஜிகள்

ஒருவர் உபயோகித்த அழகு சாதனங்களை இன்னொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அலர்ஜியும் தொற்றுநோய்களும் இதனால் அதிகமாகப் பரவும்.

பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களில் அழகுசாதனங்கள் வாங்கச் சென்றால், ஒவ்வொரு நிறுவனமும் தமது பிராண்டை உபயோகித்துப் பார்க்கச்  சொல்லி, சாம்பிள் வைத்துக் கொண்டு அழைப்பார்கள். டெஸ்ட் செய்வதற்காக அவர்கள் கொடுக்கும் அந்தக் குறிப்பிட்ட அழகுசாதனம் ஏற்கனவே பலர்  உபயோகித்ததாக இருக்கும். அதை அடுத்தடுத்த நபர்கள் டெஸ்ட் செய்து பார்ப்பதன் மூலம் தொற்று சீக்கிரம் பரவும்.

சில வகை அழகுசாதனங்கள் காலாவதி ஆன பிறகு, நிறம், திடத்தன்மை மற்றும் மணத்தில் மாறும். உதாரணத்துக்கு லிப்ஸ்டிக் பழையதாகிப்  போனால், அதன் மேல் நீர்த்திவலைகள் மாதிரி தென்படும். லிக்விட் ஃபவுண்டேஷன் நீர்த்துப் போய் நிற்கும். சில வகை அழகு சாதனங்களோ எந்த  மாற்றத்தையும் காட்டாது. அது கெட்டுப் போனதைக் கண்டுபிடிக்க முடியாது. தயாரிப்புத் தேதியையும் இத்தனை காலத்துக்குள் உபயோகிக்க வேண்டும்  என்கிற தேதியையும் கவனித்து வாங்கி, உபயோகிப்பது மட்டுமே பாதுகாப்பானது. கூடிய வரை எந்த அழகுசாதனத்தையுமே ஒரு வருடத்துக்கு மேல்  வைத்திருந்து உபயோகிக்க வேண்டாம்!

கர்ப்பகால வலிகள்!

தலைவலியா, முதுகுவலியா மருத்துவரைக் கேட்டால் தாமாகவே வலி நிவாரணியை விழுங்கி விட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள்  எக்கச்சக்கம். மற்ற நாட்களில் எப்படியோ... கர்ப்ப காலத்தில் உண்டாகிற எந்த வலியும் இப்படி அலட்சியமாக கையாளப்  படக்கூடியதல்ல. அப்படி சுய  மருத்துவம் செய்து கொள்கிற போது அது தாய், சேய் இருவரின் உயிர்களுக்குமே ஆபத்தாக  முடியலாம் என்கிறார் வலி நிவாரண சிகிச்சை நிபுணர்  டாக்டர் குமார்

கர்ப்ப காலத்துலயும், தாய்பால் கொடுக்கிற காலத்துலயும் பெண்கள் வலியால அதிகம் அவதிப்படறாங்க. வயிற்று வலி, இடுப்பு வலி,  முதுகு வலி  மற்றும் தலைவலி இந்த நான்கும் கர்ப்ப காலத்துல சகஜமா இருக்கு. கர்ப்பம் தரிக்குறதுக்கு முன்னாடி இந்த மாதிரி  வலிகள் இருந்து அதுக்கு  எடுத்துகிட்ட மருந்துகளையே கர்ப்பமான பிறகும் எடுத்துக்கிறவங்க இருங்காங்க. இது ரொம்ப ஆபத்தானது. குறிப்பாக கர்ப்பத்தோட முதல் 10  வாரங்கள்ல மருத்துவர் அறிவுரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக்ககூடாது.

அதேபோல 34 வாரங்களுக்குப்பிறகு  எடுத்துக்கிற மருந்துகளாள கருவுல உள்ள குழந்தையோட நுரையீரல் பாதிக்கப்படலாம். முதல்ல வயிற்றுவலி,  கருச்சிதைவு, கருமுட்டை வெடித்தல்,  சதை வலி, கருப்பை தசைநார் விரிவடைதல், வயிற்றுத்தசைல ரத்தம்  கட்டுதல்னு, கர்ப்ப கால  வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமா காரணத்தை கண்டு பிடிச்சி, தாமதிக்காம தாமதிக்காம சிகிச்சையை  ஆரம்பிக்கணும். அடுத்து இடுப்பு வலி.

கர்ப்ப காலத்துல உண்டாகிற ஹார்மோன்  மாறுதல்களால, இடுப்பு எலும்பு இணைப்புகள்ல வலி வரும். முதுகு தண்டுவடம் பிதுங்கினா உண்டாகிற  முதுகு வலி மாதிரியே இ ருக்கும் இது. பிரத்யோகமான பிசியோதெரபி மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் ஜாயின்ட்டுகள்ல போடக்கூடிய ஊசிகள்  மூலமா  இதைச் சரியாக்கலாம். மூணாவதா முதுகுவலி. 50 சதவீத கர்ப்பிணிபெண்களுக்கு முதுகு வலி இருக்கு. அதுல 10 சதவீதத்தினருக்கு மேல்  முதுலயும், 40  சதவீதத்தினருக்கு அடி முதுகுலயும் வலி.  நிறையபெண்களுக்கு உட்காரும் இடத்தில் வலியும் அதிகமா இருக்கு.

குறைப்பிரசவம்,  பனிக்குடம் சீக்கீரம் உடைதல், சிறுநீர் பிரச்சனையெல்லாம் இடுப்பு வலியாதான் உணரப்படும். எப்படி உட்காரணும், கீழே விழுந்த  பொருளை எப்படி தூக்கணும்னு அடிப்படை பயிற்சிகளைக் கத்துக்கொடுத்து, ஏரோபிக்ஸ்னு  பயிற்சி மற்றுத் டென்ஸ் சிகிச்சை மூலமா இவங்களுக்கு  நிவாரம் தரலாம். எலாஸ்டிக் இல்லாத பெல்ட்டுகளையும் தேவைப்பட்டா  பரிந்துரைப்போம்.

கடைசியா தலைவலி. கர்ப்ப காலத்துல உண்டாகிற தலைவலி, தானா சரியாயிடும். தலைவலிக்கான மருந்துகள் ரொம்ப  வீரியமானவைங்கிறதால,  எக்காரணம் கொண்டும் டாக்டரை கேட்காம தலைவலிக்கு மருந்து எடுக்கக்கூடாது. சரியான நேரத்துல சரியான டாக்டரை அணுகி சரியான  சிகிச்சையை எடுத்துக்கிட்டா, வலிகள்லேர்ந்து விடுபடலாம். 

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதைப் போல ஆரோக்கியம் இருந்தால்தான், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.  திருமணத்துக்குப் பிறகு குழந்தைக்காக இயற்கையாகவோ, செயற்கையாகவோ முயற்சிகளை மேற்கொள்கிற பெண்கள், அதற்கு முன் சில  விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அது குழந்தைப் பிறப்பில் சிக்கல்களையும், தாமதத்தையும் தவிர்க்கும்’’ என்கிறார்  மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில் இருக்கும் பெண்களுக்கு அவர் சொல்லும் சில அறிவுரைகள் இங்கே...

‘‘முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் உடல் எடை. பி.எம்.ஐ எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸை கணக்கிடுங்கள். அது 25க்கு மேல்  இருந்தால் ஓவர் வெயிட். 30க்கும் மேல் போனால் உடல் பருமன். உங்கள் பி.எம்.ஐ 25ஐத் தொட்டாலே நீங்கள் எச்சரிக்கையடைய  வேண்டும்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என சிலபல விஷயங்களால் சரியான எடைக்குத் திரும்ப வேண்டும்.அடுத்து உங்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால்  மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகும்.

கருமுட்டை உற்பத்தியும் பாதிக்கும். அப்படியே உற்பத்தியானாலும் முட்டைகளின் தரம் மோசமாக இருக்கும். எனவே, மருத்துவரை சந்தித்து,  மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், முட்டைகளின் தரத்தையும் மேம்படுத்தலாம். கருத்தரிப்பதற்கு 6  மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதே போல 6 மாதங்களுக்கு  முன்பே ருபெல்லா மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

திருமணமாகி கருத்தரிக்காதவர்கள், மாதவிலக்கின் 2வது நாளில் எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் மற்றும் ஏ.எம்.ஹெச் ஆகிய ஹார்மோன்களுக்கான  பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஏ.எம்.ஹெச் சோதனையின் மூலம் சினைப்பையில் முட்டைகளின் இருப்பு  எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தையின்மைக்கான வேறு  சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஏ.எம்.ஹெச் குறைவாக இருந்தால் கருமுட்டை வெளிவராது.

அதுவே அதிகமானால் பிசிஓடி பிரச்னைக்கு வழி வகுக்கலாம். எனவே, அதைத் தெரிந்து கொண்டு சரியான சிகிச்சையை மேற்கொள்ள  வேண்டியிருக்கும். பிசிஓடி இருப்பது உறுதியானால் அதற்கு ஞிபிணிகிஷி என்கிற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருமுட்டைகளின்  தரத்தை மேம்படுத்த முடியும். கருத்தரிக்க நினைக்கிற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தைராய்டு. இந்தப்  பிரச்னை இருந்தால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கும்.

சீக்கிரமே கருச்சிதைவு உண்டாகலாம். எனவே ,கருத்தரிக்கும் முன்பே தைராய்டு பிரச்னை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக்  கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளும் கருத்தரிக்கும் முன்பே கட்டுப்பாட்டுக்கு  வர வேண்டும். இந்த இரண்டும் கட்டுப்பாட்டை மீறிப் போகும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். 

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்!

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு!

வறண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது  எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீங்கி முகம் பொலிவடையும். ஆலிவ் எண்ணெய்யுடன்  முட்டையை கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறையும்.

பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் தோல் வறட்சி  நீங்கி சருமம் மென்மையாக மாறும்.

 2 தேக்கரண்டி அரைத்த தேங்காய், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர எண்ணெய்ப்  பசை சமநிலைப்படுத்துவதோடு, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து  முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழு�வினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.

சூடாக்கிய செய்த ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மாத்திரை 2, வைட்டமின் ஏ மாத்திரை 1, வைட்டமின் டி  மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து பின்னர் 15 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.  பின்னர் பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் உலர்ந்த சருமத்தின் வறட்சியை நீக்குவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து  பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

தலையின் வறட்டு தன்மையை போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கிறது. ஆரஞ்சு தோல் உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான்  கிழங்கு, கடலைபருப்பு, பயத்தம்பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளியுங்கள் இப்படி செய்து வந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.  இதையே உடம்புக்கு தேய்த்து குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

கண்கள் பளிச்சிட

கண்கள் பளிச் ஆக ஆரஞ்சு பழச்சாரை ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளை துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள்.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும்  ஆரஞ்சு பயன்படுகிறது.

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி - ஷங்கர்!

 இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி. கோடை விடுமுறைக்கு 'ஐ' வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு.


விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க, ஷங்கர் இயக்கி வரும் படம் 'ஐ'. பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.


இப்படத்திற்காக பல்வேறு வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருவதால், படம் எப்போது தயாராகும், எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியாகவில்லை.


இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில், "A முதல் Y வரை 'ஐ' திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி முடிந்துவிட்டது. விக்ரம் மற்றும் விட்டா தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகள் 25ம் தேதியோடு முடிந்துவிட்டது.


இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் ஏமி ஜாக்சனை வைத்து படமாக்கப்பட இருக்கிறது. எடிட்டிங், டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


அனைவருமே படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். அனைத்தும் நல்லவிதமாக அமையும் பட்சத்தில் 'ஐ' கோடை விடுமுறைக்கு வெளியாகலாம். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பட வெளியீடு தயாரிப்பாளரின் திட்டமிடுதலிலும் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். 

காவியத் தலைவன்: ரசிகர்கள் பார்க்காத உலகம்!

 "இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடினாங்க. அப்போ தமிழ் சினிமாவோட சிறந்த படங்களோட பேனர்களை அங்கங்கே வச்சிருந்தாங்க. அதுல 'வெயில்', 'அங்காடி தெரு' பேனர் இருந்துச்சு. அந்த வரிசையில் என்னோட 'காவியத் தலைவன்' படமும் கண்டிப்பாக இடம்பெறும்" என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றார். தற்போது 'காவியத் தலைவன்' மூலம் நம்மை எங்கே அழைத்து செல்ல இருக்கிறார் என்று உரையாடியதிலிருந்து..

'காவியத் தலைவன்' மூலம் எங்களை எந்த உலகிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறீர்கள்?

இது ஒரு பிரீயட் பிலிம். சுதந்திரத்திற்கு முன்பு நிறைய நாடக கம்பெனிகள் இருந்தன. அங்குதான் எம்.ஆர். ராதா, காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜி எல்லாருமே பயிற்சி எடுத்த பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட நாடக கம்பெனிகள் இருந்தன. அந்த நாடக கம்பெனிகளைப் பற்றிய படம் தான் 'காவியத் தலைவன்'

கிட்டப்பா - கே.பி.சுந்தரம்பாள் கதையைத்தான் படமாக எடுக்கிறீர்கள் என்ற செய்தி உலா வருகிறதே?

கிட்டப்பா - சுந்தரம்பாள் கதை மிகவும் சுவாரசியமானது. அமர்த்துவம் வாய்ந்த ஒரு பெரிய காதல் கதை. கே.பி. சுந்தரம்பாள் கிட்டப்பாவிற்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தீர்கள் என்றால் தெரியும். பயங்கர காதல் ரசம் பொங்க, அன்பு பொங்க இருக்கும். பெரிய இன்ஸ்பிரேஷன் அது.

எனக்கு சுயசரிதை எடுப்பதில் விருப்பம் கிடையாது. சுயசரிதை எடுத்தால் கிட்டப்பா மாதிரி ஒருவரைக் கொண்டுவரணும், கே.பி. சுந்தரம்பாள் மாதிரி ஒருவரைக் கொண்டுவரணும். கிட்டப்பாவின் சந்ததியினர் இன்னும் இருக்காங்க. அவங்க எதுவும் மனசு வருத்தப்படக் கூடாது. அவங்க கூட போன் பண்ணி கேட்டாங்க. நீங்க எங்க தாத்தாவோட கதையைத்தான் எடுக்கறீங்களான்னு. சுயசரிதை எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இது நாடக வாழ்க்கையில் இருக்கிற நடிகர்கள் சம்பந்தமான கதைதான். தனியா ஒரு ரெண்டு பேரோட கதை கிடையாது.

நாடக கம்பெனிகளோட கதையைப் படமாக எடுக்கத் தோன்றியது எப்படி?

ஜெயமோகனோடு திருநெல்வேலியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். இரவு ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். அப்போ ஜெயமோகன், அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ன்னு ஒரு புத்தகம் இருக்கிறதா சொன்னார். அதற்கு பிறகு நாடகம் சம்பந்தமா நிறைய பேச்சு வந்தது. எப்படியெல்லாம் நாடகம் நடக்கும், எப்படியெல்லாம் தயாராவாங்க அதுல இருக்கிற சுவாரசியமான சம்பவங்கள் இப்படி பேசிக்கொண்டே இருந்தோம்.

இன்றைக்கு இருக்குற நாடக வாழ்க்கைக்கும், அன்றைக்கு இருக்குற நாடக வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள். அன்றைக்கு ஒரு குழுவா தங்கி பயிற்சி எடுத்துக்கிறது. சின்ன வயசிலேயே கொண்டுவந்து நாடகத்துல நடிக்கிறதுக்காக விட்டுறது. அப்புறமா, கட்டபொம்மனோட கூத்தைப் பார்த்துதான் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து நாடக கம்பெனில சேர்ந்திருக்கிறார். அவரோட பக்கத்து வீட்டுக்காரர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். எம்.ஆர். ராதா குழுவில் எல்லாம் சிவாஜி நடித்திருக்கிறார். இப்படி நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு.

ராஜ பார்ட், கள்ள பார்ட், ஸ்த்ரீ பார்ட் அப்படினு அவங்களோட வாழ்க்கையே வேறு ஒரு உலகம். குருகுலம் மாதிரியான ஒரு வாழ்க்கை. ஜெயமோகன் பேசிவிட்டுப் போய்விட்டார். உடனே, நான் பழைய நாடகங்கள் சம்பந்தமா நம்ம கிட்ட என்ன தரவுகள் இருக்குன்னு தேடினேன். நிறைய புத்தகங்கள் கெடச்சது. நூலகங்களில் நிறைய தரவுகள் கிடைச்சது.

இவ்வளவு சுவாரசியமா இருக்கே. இதை ஏன் படமா பண்ணக் கூடாது, ரொம்ப கலர்ஃபுல்லா வரும்னு நினைச்சேன். நிறைய கலர் கலரான துணிகள், மேக்கப்புகள், விதவிதமான கெட்டப்புகள்னு ஒரு பெரிய உலகம் அது. அந்த உலகம் தமிழ் சினிமால வரல. மக்களுக்கும் இலக்கியத்திற்கும் ஒரு பாலமா நாடகங்கள் இருந்திருக்கு. நாடகக் கலைஞர்தான் நேரடியா மக்கள்கிட்ட பேசியிருக்கார். அந்தக் காலத்தில் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டும்தான். கூட்டம் கூட்டமா போய் நாடகம் பாத்துருக்காங்க. இப்படி நிறைய தரவுகளை வைச்சு எடுத்திருக்கும் படம் தான் 'காவியத் தலைவன்'

படப்பிடிப்பு தளங்களுக்கு நிறைய மெனக்கெடல்கள் இருந்திருக்குமே?

ரொம்ப கஷ்டப்படல. மதுரை, காரைக்குடி இப்படி தென் மாவட்டங்களைச் சுற்றிதான் நாடகம் போட்டுருக்காங்க. எங்களுக்குக் காரைக்குடி ரொம்ப வசதியா இருந்தது. நாடகக் கொட்டகை செட் போட்டு எடுக்க வேண்டிய இடம். ஓலைகளால் செய்யப்பட்ட கொட்டகைதான். அதனால படப்பிடிப்பு தளத்திற்காக மெனக்கெடல் இல்ல. ஆனா காஸ்டியூம்ஸ், மேக்கப், மொழி, நாடக வார்த்தைகள் இதுக்குதான் ரொம்ப மெனக்கெடல் இருந்தது.

இந்த மாதிரியான கதைக்கு இசை முக்கியமான பங்காக இருக்குமே?

கர்நாடக இசையும், நாட்டுப்புற இசையும் கலந்த படம். 'காவியத் தலைவன்' ஒரு மியூசிக்கல் படம்னுகூட சொல்லலாம். 8 பாடல்கள் இருக்கு. சரியான இசையமைப்பாளர் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். எப்போது கனவு காண்றது பெருசா கனவு கண்டுற வேண்டியதுதானே. ரஹ்மான் சார் இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன். அவரை எப்படி சந்திக்கிறதுனு எனக்குத் தெரியல.

சித்தார்த் கிட்ட ரஹ்மான் சார் இருந்தா எப்படியிருக்கும்னு சொன்னேன். அவர்தான் ட்ரை பண்ணி ரஹ்மான் சாரை சந்திக்க ஏற்பாடு பண்ணினார். நான் போய் கதை சொன்னேன். கதையை கேட்டவுடனே அவருக்கு பயங்கர சந்தோஷமாயிடுச்சு. ஒத்துக்கிட்டார். இசை ஒரு புதிய தன்மையோட இருக்கும்.

ப்ரீயட் படங்கள் மீது அப்படி என்ன காதல்?

பார்க்காத உலகத்தை நீங்க ப்ரீயட் படங்கள்ல பார்க்க முடியும். டிஸ்கோத்தே, டாஸ்மார்க் பார், போன் உரையாடல்கள், பேஸ்ஃபுக், ட்விட்டர் இப்படி இப்போ இருக்குற உலகத்துல நிறைய விஷயங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அது நம்ம பார்க்குற படங்கள்ல பிரதிபலிச்சுகிட்டே இருக்கு. வித்தியாசமே இல்லாம போச்சு.

புதுசா, வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கணும்னு எனக்கு ஆசை. எல்லாருமே பார்க்குற விஷயங்களைக் காட்டுறதைவிட, புதுசா, பல விதமான படங்களையும் கொடுக்கணும்னு ஆசை. என்னோட படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு விதத்தில் பார்ப்பவர்களுக்குப் புதுசாயிருக்கும். ரெண்டு வருஷத்திற்கு ஒரு தடவை படம் இயக்குறேன், நாலு வருஷத்திற்கு ஒரு தடவை படம் ரிலீஸாகிறது. 2002ல என்னோட முதல் படம் வந்தது, திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் ஒடிவிட்டன. இதுவரைக்கும் 5 படங்கள் பண்ணியிருக்கேன். அவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கிறப்போ ரசிகர்களுக்கு புதுசாதான் கொடுக்கணும்னு ஆசைப்படறேன். அதுக்கு மெனக்கெடல், கஷ்டம் எல்லாமே அதிகம்தான்.

'அங்காடி தெரு' படத்தோட தாக்கம் இன்னும் இருக்கே?

எல்லாருமே 'அரவான்' படத்தை மறந்துட்டாங்க. 'அங்காடி தெரு' படத்தை தான் ஞாபகம் வச்சிருக்காங்க. நான் எங்கே போனாலும், 'அங்காடி தெரு' படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான ஜவுளிக் கடைகளுக்கு போறப்போ 'அங்காடி தெரு' படம்தான் ஞாபகம் வருதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் உண்மையைப் பதிவுசெய்யும் சுதந்திரம் குறும்படங்களுக்கு மட்டும்தான் இருக்கிறதுன்னு சொல்றீங்களே… ஏன் திரைப்படத்தில் இது சாத்தியமில்லை?

திரைப்படங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. கமர்ஷியலா நல்ல போகணும் அப்படிங்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனா, குறும்படங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லை. அழகா பண்ணிருந்தா மட்டும் போதும்.

கடைக்கோடி ரசிகன் வரைக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டுபோகணும் என்றால், அதை தேன் தடவி தான் சொல்ல வேண்டியதிருக்கு. அந்த மாதிரி தேன் தடவி சொன்னாலே இருட்டு உலகம் அப்படிங்குறது போயிரும். உண்மையான விஷயங்கள் என்ன அப்படிங்கிறதை மக்கள்கிட்ட சேர்க்க முடியாமலே போய்விடுகிறது.

ஒரு குறும்படத்தில் 'அங்காடி தெரு' படத்தை உலக தரத்தில் எடுத்திருக்க முடியும். அதற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. நம் கண் முன்னாடி நடந்த மிகப் பெரிய கொடூரம் வந்து ஈழத்தோட போர். நம்மோட சந்ததியினர், இனம் அழித்து ஒழிக்கப்பட்டது. அதற்கான எந்த ஒரு பதிவும் நம்மிடம் இல்லை. அதை ஒரு குறும்படமாக, அந்த வலியை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அந்த நாட்டின் மீது போர்க் குற்றம் சுமத்த ஒரு குறும்படத்தால் முடியும்.

உதவி இயக்குநர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

இலக்கியம் சார்ந்த அறிவு இருக்கணும்னு நினைக்கிறேன். நான் ரொம்ப இலக்கியம் படிக்கிற ஆள். எனக்கு விருப்பம், ஆசைகள் இருக்கிறது. இதையெல்லாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய, விவாதிக்கக்கூடிய நபர்களைத்தான் நான் உதவி இயக்குநராக சேத்துக்கறே. இலக்கிய ரசனை இருக்கிறதா, எழுத்து ஆர்வம் இருக்கிறதா என்பதுதான் முதல் தகுதி. அடுத்ததா தொழில்நுட்ப அறிவு இருக்கணும். கேமிராவைப் பற்றி தெரியணும். கம்ப்யூட்டர் சம்பந்தமான அறிவு இருக்கணும்.

இப்போ காமெடி படங்கள் தான் தொடர்ச்சியாக ஹிட்டாகுது. இதை எப்படி பாக்குறீங்க?

சுவாரசியமான படங்கள் எப்போதும் ஹிட்டாகும். காமெடி படம், காமெடி இல்லாத படம் அப்படிங்கிற விதிவிலக்கு எப்போதுமே இல்லை. வரிசையாக காமெடி படங்கள் எடுத்த இயக்குநரின் கடைசி படம் மாபெரும் தோல்வி. இப்போ காமெடி படங்கள் பாத்தீங்கன்னா, கதை இல்லாததினால் ஓடல. எப்போதுமே சுவாரசியமான படங்கள் மக்கள் கிட்ட ரீச்சாகும். 'கோலி சோடா'னு ஒரு படம். சுவாரசியமான படம். மக்கள் கிட்ட எப்படி ரீச்சாச்சு பாத்தீங்களா. அதை யாருமே தடுத்து நிறுத்த முடியாது. 

'கோச்சடையானும்' - செளந்தர்யாவும்!

 'கோச்சடையான்' திரைப்படம் வெளியாகும் தேதி, இசை வெளியீட்டு விழா முடிந்த உடன் முடிவு செய்யப்படும் என்று இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


ரஜினி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அமிதாப் பச்சன், இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் ஷங்கர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


'கோச்சடையான்' படத்திற்காக கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், 'கோச்சடையான் மொபைல்ஸ்’ என்ற பெயரில் மொபைல் போன்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 'கோச்சடையான் மொபைல்' போனை இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.


இப்பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பேசியது, "'கோச்சடையான்' படத்தின் இசை மார்ச் 9ம் தேதி கண்டிப்பாக வெளியாக இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகே, படம் வெளியாகும் தேதி முடிவு செய்யப்படும்.


என்னோட அப்பா இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக நடந்து கொண்டது என்னை வியக்கவைத்தது. அதுமட்டுமன்றி, தீபிகா படுகோனுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடப்பட்டார்.


'கோச்சடையான்' படத்தின் பட்ஜெட் மிகவும் பெரியது. இப்படத்தில் நாகேஷை நவீன முறையில் கொண்டு வந்து இருக்கிறோம். கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்" என்று கூறினார். 

'காவியத்தலைவன்' படத்துக்காக ஹாலிவுட் வாய்ப்பை விட்டேன் : ஏ.ஆர்.ரஹ்மான்

 'காவியத்தலைவன்' படம் இசையமைக்க என்னிடம் வந்ததால், ஹாலிவுட் படத்தினை விட்டு விட்டேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'காவியத்தலைவன்'. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். சசிகாந்த் மற்றும் வருண்மணியன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

படக்குழுவினர் அனைவருமே இப்படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது "எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் வசந்தபாலன் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கார். நானும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

நான் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கும் போது, ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருந்தேன். ரொம்ப டார்க்கான படம் அது. இந்த படம் வந்த உடனே, ஹாலிவுட் படத்தை வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கிறது. நாடகம் சம்பந்தமான படம் என்பதால் ஒவ்வொரு பாட்டிலும் 8 பாட்டு இருக்கும். சின்ன சின்ன பாடல் எல்லாம் சேர்த்தால் படத்தில் 20 பாடல்கள் இருக்கும். 1930ல் நடக்கும் கதை என்பதால், எந்த மாதிரி பாடல்கள் பண்ணினால் மக்கள் கேட்பார்கள், அப்புறம் எந்த ராகம் உபயோகிக்கலாம் என்று நிறைய யோசித்து செய்திருக்கிறேன்.

அக்காலத்தின் இசைக்கு கொஞ்சமாவது ஒட்டுற மாதிரி இருக்கணும். இப்படம் ஒரு குழு முயற்சி தான். இப்படத்தில் பணியாற்றியதற்காக பெருமையடைகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே." என்று கூறினார். 

‘நோ’ சொன்ன சிம்பு! - சொல்ல மறுக்கும் திரிஷா!


‘நோ’ சொன்ன சிம்பு! - சொல்ல மறுக்கும் திரிஷா!


பிப்ரவரி மாதத்தின் காதலர் தினத்தை காதல் ஜோடிகள் வெகு சிறப்பாக கொண்டாடினர். ஆனால் திரையுலத்தைச் சேர்ந்த சில காதல் ஜோடிகளுக்குத் தான் இந்த வருட காதலர் தினம் அவ்வளவாக மகிழ்ச்சி தரக்கூடிய தினமாக அமையவில்லை.



சமீபத்தில் கைகோர்த்த காதல் ஜோடிகளான சிம்புவும் ஹன்ஸிகாவும் இந்த காதலர் தினத்தை எப்படி கொண்டாடப்போகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த திரையுலகமும் உற்று கவனிக்க எந்த கொண்டாட்டமும் இல்லாமல் சொதப்பியது.


பேட்டிகளில் சிம்புவைப் பற்றிய கேள்விகளை ஹன்ஸிகா தவிர்த்துவர, சிம்புவோ சமீபத்தில் எங்கள் காதல் முறிந்துவிட்டது என்று அறிக்கையே விட்டுவிட்டார். “காதல் என்ற சீரியஸான உறவுமுறைக்கு ஹன்ஸிகா ஏற்றவரல்ல. அவர் இன்னும் வளரனும்” என்று சிம்பு விட்ட அறிக்கையில் திரையுலகமே ஆடிவிட்டது.



சிம்பு ஹன்ஸிகாவின் காதல் முறிந்த கதை திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட, இந்த பரபரப்பை அப்படியே தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் காஜல் அகர்வால். காதலுக்கும் நேரமில்லை, கல்யாணத்துக்கும் நேரமில்லை என்று பேட்டிகளைக் கொடுத்தவண்ணம் இருந்தவர், திடீரென தனது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடித்துவைத்து பல கோவில்களுக்கும் சென்று வந்தார்.


தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டு அடுத்த ரவுண்டுக்காக காத்திருக்கும் காஜல், காதலில் சிக்காமல் இருக்கிறாரே என பலரும் சிலாகித்த சமயத்தில், காஜல் அவர் பாய்-ஃபிரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகிவிட்டன. மும்பையைச் சேர்ந்த டிசைனிங் நிறுவன தொழிலதிபருடன் காஜல் காதல் வயப்பட்டிருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகிவிட்டதால் கூடிய விரைவில் அவருக்கும் திருமணம் நடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




திரையுலகில் தனது 10-வது ஆண்டைக் கடந்து கொண்டிருக்கும் த்ரிஷா கேமரா முன்பு நின்றதுமே, அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ’ரம் (ரம்பா ஊர்வசி மேனகா) ’ திரைப்படத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறாராம். பலவித ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருப்பதாகவும், எத்தனையோ படங்களில் நடித்துவிட்டாலும் தற்போது தான் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் மகிழ்ச்சியில் பூரிக்கிறார் த்ரிஷா.


வழக்கம் போலவே ‘உங்களுக்கும் ராணாவுக்கும் இடையில் இருப்பது காதலா? நட்பா? என்ற கேள்விக்கு ‘சிலவற்றைப் பற்றி பேச சரியான நேரம் வரவேண்டும். அந்த சமயத்தில் கண்டிப்பாக பேசுவேன். உங்களை விட்டால் வேறு யாரிடம் பேசப்போகிறேன்’ என தொடர் புள்ளிகளை வைக்கிறார் த்ரிஷா. 

வல்லினம் -கிரிக்கெட்டுக்கு எதிரான படமா?(விமர்சனம்)!

வல்லினம் - விமர்சனம்

பலருக்கும் வாழ்க்கை விளையாட்டாக இருக்கிறது. ஆனால் விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் வல்லவர் தான் படத்தின் நாயகன். எல்லா விளையாட்டுகளிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. கூடைப்பந்து விளையாட்டில் உள்ள சுவாரஸ்யங்களை அதே அளவோடு அதில் கொஞ்சம் சினிமாவையும் கலந்து அதிரடி ஆட்ட நாயகனாக விளங்குகிறார் இயக்குனர் அறிவழகன். இது கிரிக்கெட்டுக்கு எதிரான படமா? என சில சர்ச்சைகளையும் இயக்குனர் சம்பாதிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது!


கூடைப்பந்து விளையாட்டு வீரன் நகுல். தன் நண்பனான கிருஷ்ணாவும் கூடைப்பந்து வீரர். திருச்சி கல்லூரியில் படிக்கும் இவர்களுக்கு, படிப்பை விட அதிக கவனம் விளையாட்டில் தான். விளையாட்டு நேரத்தில் விபத்து ஏற்பட, கீழே விழுந்த நகுலின் நண்பன் கிருஷ்ணா இறந்துவிடுகிறார். அவருக்கு முன்பே இதயம் பலவீனமாய் இருந்ததும் தெரியவருகிறது. நண்பனின் நினைவில் இருந்து மீள, அன்றுமுதல் கூடைபந்தை தொடுவதில்லை என சபதமெடுத்து, சென்னை கல்லூரியில் சேர்கிறார் நகுல்.


சென்னை கல்லூரியில் புது நண்பன் கிடைக்க, அவரும் கூடைப்பந்து வீரர் என நாயகன் நகுலுக்கு தெரியவருகிறது. கல்லூரியில் கிரிக்கெட் டீமுக்கும் கூடைப்பந்து டீமுக்கும் தகராறு ஏற்படுகிறது. மாணவர்களுக்குள் இருக்கும் அரசியல் கல்லூரி நிர்வாகம் வரை தெரியவருகிறது. தொடர்ந்து மாநில அளவில் சாம்பியன்ஷிப் வாங்குவது கிரிக்கெட் அணி தான் என்பதால், மற்ற விளையாட்டு மைதானங்களை மோத்தாமாக கிரிக்கெட் மைதானமாக மாற்றி அமைக்க முடிவுசெய்கிறது கல்லூரி நிர்வாகம்.


தான் நேசிக்கும் விளையட்டின் தன்மானத்தைக் காப்பாற்ற மீண்டும் கூடைப்பந்தைக் கையில் எடுக்கிறார் நாயகன் நகுல். வால் ஏந்திய வீரனைப்போல பந்தைக் கொண்டு அதகளம் புரிகிறார் நகுல். ஏற்கெனவே இருக்கும் கூடைப்பந்து வீரர்களை கட்டமைக்கிறார். ஸ்பான்சர்ஷிப், விளம்பரம், வியாபாரம் என எல்லாம் கிரிக்கெட் பக்கம் இருக்கிறது. அதை எதிர்த்து போராட நகுலிடம் திறமையும், தன்னம்பிக்கையும் மட்டுமே உள்ளது.


கல்லூரியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. கல்லூரி, அரசாங்கம் என தன் பணபலத்தால் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார் கிரிக்கெட் அணி கேப்படன். பல சதிகளைத் தாண்டி, பெரிய போராட்டத்திற்குப் பிறகு தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள் கூடைப்பந்து வீரர்கள்.


கிரிக்கெட் எந்த அளவிற்கு ஆபத்தை சமூகத்தில் விளைவித்திருக்கிறது என்று எடுத்து சொல்லும் இயக்குனர், அதற்கு முற்றிலும் எதிராக படத்தை சித்தரிக்காமல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முன்னுரிமை வேண்டும் என்று படத்தின் கருத்தை வெளிப்படுத்துவது அவரின் புத்திசாலிதனத்தைக் காட்டுகிறது. கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்லவில்லை, கிரிக்கெட் விளையாட்டை மட்டும் தூக்கிக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறது வல்லினம்.


1983யில் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற நாளில் தொடங்கிய மோகம், இன்று ஐ.பி.எல், சி.சி.எல் என்று நட்சத்திர வெளிச்சத்தில் கிரிக்கெட் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையை ஒரு கூடைப்பந்து வீரர் விளக்கும் காட்சி அற்புதம். தன் சீனியருடன் போட்டிபோடும் நகுல் வெற்றியை விட்டுக்கொடுத்து அதற்கு விளக்கம் சொல்வது நச்!


நகுல் சென்னைக்கு வந்த புதிதில் ரயிலில் நடக்கும் ஈவ்-டீசிங் காட்சியும், தப்பி செல்ல ரயிலின் முன்புறம் தாவிகுதிப்பதும் பில்டப் காட்சிகளே தவிற அதில் அர்த்தம் இருந்ததாக தெரியவில்லை. கடற்கரை மணலில் ஹீரோவையும் ஹீரோயினையும் கட்டிப்புரள வைத்திருப்பது என சில காதல் கசமுசா காட்சிகள் படத்தின் தரத்தை குறைத்துவிடுகிறது என்பதும் உண்மை.


இடைவேளைக்கு முன்பு நடக்கும் கூடைப்பந்து போட்டியும், க்ளைமாக்ஸ் காட்சியின் போது நடக்கும் கூடைப்பந்து போட்டியும் பறபறவென ராக்கெட் வேகத்தில் பறக்கிறது காட்சியமைப்பு. காட்சிகளின் வேகத்திற்கு ஒளிப்பதிவார் பாஸ்கரன் மற்றும் படத்தொகுப்பாளர் சபு ஜோசப் ஆகியோருக்கு பாராட்டுகள்.


‘வல்லினம்’ என்ற தீம் பாடலைத்தவிர மற்ற பாடல்களில் ஏமாற்றத்தையே தருகிறார் இசையமைப்பாளர் தமன். பின்னணி இசையில் பரவசப்படுத்துகிறார்.


நியாயமான உண்மையை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துகள்!

வல்லினம் - துணிச்சலான பதிவு!